×

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து: 5 பேர் பலி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் செல்லக்கூடிய சாலையிலுள்ள பழையபேட்டை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் சுமார் 15 க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் எதிர்பாராத விதமாக உள்ளே இருக்கக்கூடிய பட்டாசு வெடித்ததில் பட்டாசு குடோன் எரிந்து மொத்தமாக இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அருகில் இருந்த 3வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் பலியாகியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த 5 பேரில் ஒரு சிறுவன், ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பட்டாசு குடோனின் உரிமையாளரான ரவி நிகழ்விடத்தில் உள்ளார். கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ண ஆட்சியர் சரயு, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி குப்பம் நெடுஞ்சாலையில் பயங்கர போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 500கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்குள் 5க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் தற்போது அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும் மேலும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் அடங்காமல் மளமளவென பரவி வருவதால் அப்பகுதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து: 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Fireworks ,Kudon ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே...