×

நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை :கைதான 28 பாமகவினருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் கைதான 28 பாமகவினருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், இரண்டாம் கட்ட சுரங்க பணிக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் வயல்வெளியில் பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டி பைப்களை புதைத்து வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் பஸ்கள் மீது கல்வீச்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், என்என்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று பாமகவினர் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அன்புமணி தலைமையில் கட்சியினர் என்எல்சியை முற்றுகையிட முயற்சித்தனர். அப்போது பாமகவினரை போலீசார் தடுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு நடந்தது. அப்போது பாமகவை சேர்ந்த ஒருவர் திடீரென போலீஸ் வாகனம் மீது கல்வீசினார்.

அவர்களை போலீசார் கலைத்தனர். ஆத்திரமடைந்த பாமகவினர் அங்கிருந்த கல், கட்டை உள்ளிட்ட பொருட்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் 10 காவலர்கள், மூதாட்டி ஒருவர் காயமடைந்தனர். சில போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து பாமகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசியதால் பதற்றமான சூழல் உருவானது.

இந்த நிலையில்,நெய்வேலி கலவரத்தையடுத்து பாமக கட்சியைச் சேர்ந்த 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தொடர்ந்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாமகவினர் 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 28 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யபட்ட 28 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே கடலூரில் நேற்றிரவில் மட்டும் மேலும் 5 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி யஉள்ளனர்/ கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் இதுவரை 25 பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

The post நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் வன்முறை :கைதான 28 பாமகவினருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Naiveli NLC ,Cuddalore ,Cuddalore District ,Naiveli ,NLC ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை