×

நத்தம் அருகே எருதுகள் மாலை தாண்டும் விழா: 300க்கும் மேற்பட்டவை பங்கேற்பு

 

நத்தம், ஜூலை 29: நத்தம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுகள் மாலை தாண்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. நத்தம் அருகே செந்துறை மல்லநாயக்கன்பட்டியில் உள்ள ஜக்காலம்மன் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருதுகள் மாலை தாண்டும் விழா நேற்று கோவில்பட்டி அருகே கருத்தநாயக்கர் மந்தையில் நடைபெற்றது. முன்னதாக காலை முதல் எருதுகள் கொண்டுவந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜக்காலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதையடுத்து, எருதுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த விழாவை நடத்துவது வழக்கம்.

இதில், 12 மந்தைகளைச் சேர்ந்த கரூர், நாமக்கல் உள்ளிட்ட 35 ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. இதில் முதலாவதாக வந்த மந்தை எருதுக்கு எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், வேஷ்டி, துண்டு அடங்கிய பிரசாத தொகுப்புடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இதற்கான ஏற்பாடுகளை பெரிய மல்ல நாயக்கன்பட்டி, பந்தி பொம்மிநாயக்கனூர் மற்றும் கன்னிமார்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் செய்திருந்தனர்.

The post நத்தம் அருகே எருதுகள் மாலை தாண்டும் விழா: 300க்கும் மேற்பட்டவை பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : jumping of ,Natham ,Nattam ,Bulls jumping festival ,
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்