×

அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ரூ.6.99 கோடியில் வடிகால் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

சென்னை: அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி டிஎன்எச்பி பேரறிஞர் அண்ணா சாலையில் ரூ.6.99 கோடியில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில், 10,000 கி.மீ நீள ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி சாலைகள் படிப்படியாக மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக சுமார் 2000 கி.மீ. நீள சாலைகள் நடப்பாண்டில் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 2000 கிமீ நீளமுள்ள 873 ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளை, ரூ.2,178 கோடி மதிப்பில் தரம் உயர்த்த 2022, நவம்பர் 18ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது, திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையாகும். சாலையின் மொத்த நீளம் 2.80 கி.மீ. ரூ.6.99 கோடி மதிப்பில் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இச்சாலையானது, திருவேற்காடு – அம்பத்தூர் சாலையில் தொடங்கி, ஆவடி மாநகர சாலையின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 205ல் இணைகிறது. இச்சாலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி, 800 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலையாக மேம்படுத்தப்பட் உள்ளது. மேலும், மழைநீர் சாலையின் குறுக்கே கடந்து செல்லும் வகையில் மூன்று இடங்களில் சிறு பாலங்களும் அமைக்கப்படுகிறது.

தற்போது, இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, பணி தொடங்கப்படுகிறது. இச்சாலையை தரம் உயர்த்துவதன் மூலம், அண்ணனூர் ரயில் நிலையம் மற்றும் திருமுல்லைவாயல் ரயில் நிலையங்களுக்கு செல்லும் போக்குவரத்து நெரிசல் குறையும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடலோர காவல் படை குடியிருப்பு, ஒன்றிய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம், தேசிய பரவு நோயியல் நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்) ஆகிய பகுதிகளின் பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ரூ.6.99 கோடியில் வடிகால் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ayyappakkam Primary Panchayat ,Minister AV Velu ,Chennai ,Ayappakkam First Panchayat TNHP ,Anna Road ,Ayappakkam First Panchayat ,Minister ,AV Velu ,Dinakaran ,
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...