×

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் ஒலிம்பிக் தரத்தில் செயற்கை இழை மைதானம் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: 7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை-2023 போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இந்த போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது. போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.17.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்காக, ரூ.12 கோடி நிதியை ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 6ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார். மேலும், சர்வதேச அளவிலான போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்களுக்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டன.

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடந்த சீரமைப்புப் பணிகள் முடிவுற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார். ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை-2023 போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, ஜோசப் சாமுவேல், எம்.கே.மோகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், துணை மேயர் மகேஷ் குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் குமார் திர்கி, பொருளாளர் சேகர் ஜெ.மனோகரன், இந்திய ஹாக்கி அணி தேர்வாளர் முகமது ரியாஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் ஒலிம்பிக் தரத்தில் செயற்கை இழை மைதானம் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mayor Radhakrishnan Hockey Stadium ,Olympic ,synthetic fiber ,Centenary Spectator Dome ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Egmore Mayor Radhakrishnan Hockey Stadium ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...