×

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத நாடு இந்தியா: ஜப்பான் வெளியுறவு அமைச்சர் பாராட்டு

புதுடெல்லி: சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அடைய இந்தியா தவிர்க்க முடியாத நட்பு நாடாகும் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமசா ஹயாசி, வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஆனந்தா மையம் இணைந்து நடத்திய இந்தியா-ஜப்பான் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ‘‘இந்தியா-ஜப்பான் இடையே சைபர் மற்றும் விண்வெளி உள்ளிட்ட புதிய துறைகளில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிலையான ஒத்துழைப்பை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்த போது பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், இந்தியாவும் ஜப்பானும் மட்டுமே உலக நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தின. சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அடைய இந்தியா தவிர்க்க முடியாத நட்பு நாடாக உள்ளது. எனவே, இந்தியா உடனான நட்பை, உத்திகள் உள்பட பல்வேறு துறைகளிலும் மேலும் விரிவுபடுத்த, வலுப்படுத்த ஜப்பான் விரும்புகிறது,’’ என்று தெரிவித்தார்.

The post இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத நாடு இந்தியா: ஜப்பான் வெளியுறவு அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Indo-Pacific region ,Japan ,minister ,New Delhi ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!