×

ராமேஸ்வரம் வந்தார் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணிப்பு: எடப்பாடி, ஓபிஎஸ், அன்புமணி உள்ளிட்டோர் வரவில்லை

ராமேஸ்வரம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் கலந்துகொள்ளாமல் எடப்பாடி, ஓபிஎஸ், பிரேமலதா, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கூண்டோடு புறக்கணித்தனர். இதனால் பாஜவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுகவை பாஜ தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் உள்ளிட்ட வழக்குகளை வைத்து மிரட்டி பணிய வைத்து வருகிறது. அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் எடப்பாடியுடன் இருப்பதால், அவருக்கு பாஜ முக்கியத்துவம் தருகிறது. இது, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. காரணம், கொங்கு மண்டலத்தில் தான் மட்டும் செல்வாக்காக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார்.

ஆனால், கொங்கு மண்டலத்தை வைத்துதான் எடப்பாடி அரசியல் செய்து வருகிறார். இதனால், அண்ணாமலை-எடப்பாடி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மோசமான ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை மிரட்டினார். இதனால் கோபமடைந்த எடப்பாடி, ‘தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும். கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று டெல்லி பாஜ தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லிக்கு அழைத்து அண்ணாமலைக்கு அமித்ஷா டோஸ் விட்டதால், அதிமுகவை பற்றி விமர்சிப்பதை அண்ணாமலை தவிர்த்தார்.

இந்நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தான் நடத்தும் பாத யாத்திரையில் பங்கேற்க கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த சூழலில், ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்காக ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய நாடாளுமன்ற கட்டிடம் போன்று பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பாதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தில் பங்கேற்குமாறு கடந்த 24ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணாமலை பேசியிருந்தார். மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக, தேமுதிக உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த நடைபயண தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இது பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது சொந்த ஊரான பெரியகுளத்தில்தான் உள்ளார்.

டெல்லியில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ்சுக்கு அழைப்பு விடுக்காமல் பாஜ முற்றிலுமாக கழற்றிவிட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் நடைபயண தொடக்க விழாவை புறக்கணித்து பதிலடி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள செல்வாக்கு இல்லாத தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். பிரதமருக்கு அடுத்த நிலையில் அமித்ஷா உள்ளார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம், நடைபயணத்தை முக்கிய தலைவர்கள் புறக்கணித்துள்ளதால் பாஜவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதேநேரம் விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி ரவிபச்சமுத்து, தேவநாதன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி, விவசாய சங்கம் ராமலிங்கம், தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* ஊருக்குள்ளே நடைபயணம் வெளியே போக சொகுசு பஸ்

தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நடைபயணம் மேற்கொண்டனர். அதேபோல, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏற்கனவே நடை பயணம் மேற்கொண்டதோடு பல்வேறு பிரிவினரையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முன்னாள் துணை பிரதமர் அத்வானி, தேர் போன்ற வாகனம் தயாரித்து பயணம் மேற்கொண்டார். ஆனால் அண்ணாமலையோ இரண்டும் இல்லாமல் புதுவித பயணம் மேற்கொள்கிறார். அதாவது ஊர்களுக்குள்ளே மட்டும் நடைபயணம். ஊரை தாண்டினால் பஸ்சில் பயணம் என்று முடிவு செய்து, சொகுசு பஸ்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் அவர் மேற்கொள்வது நடை பயணமா, பஸ் பயணமா? என்று அவருக்கும் தெரியவில்லை. தொண்டர்களுக்கும் புரியவில்லை. இதனால் என்ன பயணம் என்று அண்ணாமலையே கன்ஃப்யூஸ் ஆகிவிட்டதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

* அதிமுக கொடி, பேனர் மிஸ்சிங்

அமித்ஷா வருகையையொட்டி மாவட்ட தலைநகர் ராமநாதபுரம் முதல் உச்சிப்புளி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம் என ராமேஸ்வரம் விழா மேடை வரை சாலையோரங்களில் வரவேற்பு போர்டுகள், கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பாஜ கொடிகள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், கூட்டணி கட்சிகளின் கொடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில்கூட அதிமுக கொடியோ, பேனரோ, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படமோ இடம் பெறவில்லை.

* மோடியை முதல்வராக்கிய உதயகுமார் பேச்சை பாதியில் நிறுத்திய அமித்ஷா

அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசும்போது, ‘‘இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா, தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி, புரொட்டக்காலை பின்பற்றாமல் கூட மோடியும், அமித்ஷாவும் ஜெயலலிதாவை வீட்டிற்கு வந்து சந்தித்தார்கள். எடப்பாடி ஒன்றிய அரசிடம் மெடிக்கல் காலேஜ் கேட்டார். இதயத்தில் இடம் உண்டு, காலேஜ் இல்லை என சொன்னார்கள். பிறகு 11 காலேஜை பெற்று சாதனை படைத்தார்’’ என தொடர்ந்து எடப்பாடியை புகழ்ந்து பேசினார். அப்போது அமித்ஷா அண்ணாமலையிடம் ஏதோ பேசினார். அதனை தொடர்ந்து அண்ணாமலை, நிகழ்ச்சி வரவேற்பாளர் கருப்பு முருகானந்தத்தை அழைத்து, ஆர்.பி.உதயகுமார் பேச்சை நிறுத்த சொன்னார். இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமாரிடம் பேச்சை நிறுத்தும்படி பேப்பரில் முருகானந்தம் எழுதி கொடுத்தார். இதனை தொடர்ந்து பேச்சை முடித்தார் உதயகுமார். மேலும், மோடி மீண்டும் முதல்வராவார் என கூறி அதிர்ச்சி அளித்தார்.

* இருக்கை காலி வாகனங்கள் காத்திருப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவதுண்டு. ஆனால், நேற்றைய விழா ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்ததால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகர் பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. நேற்றைய விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாஜ கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பலரை வாகனங்களில் வைத்தும் அழைத்து வந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவு ஆட்கள் வராததால், காலி சேர்களே விழாவை அலங்கரித்தன. மேலும், டூர் வந்த ஜோரில் பாஜ தொண்டர்கள் பலர், மது பாட்டில்களை வாங்கி குவித்து விழாவை புறக்கணித்து எஸ்கேப் ஆயினர்.

The post ராமேஸ்வரம் வந்தார் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணிப்பு: எடப்பாடி, ஓபிஎஸ், அன்புமணி உள்ளிட்டோர் வரவில்லை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Amitsha ,Edappadi ,OPS ,Annpurani ,Home Minister ,Baja ,Anamalai ,Edabadi ,Anbaramani ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...