×

அன்புமணி கைதை கண்டித்து பாமகவினர் போராட்டம்!: கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்து சேவை முழுமையாக நிறுத்தம்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்து கழகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி.க்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற நிலையில் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளின் நிலத்தை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்துவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் காவலர்கள், செய்தியாளர்கள் என பலர் காயமடைந்தனர்.

கூட்டத்தை கலைக்க போலீஸ் லேசான தடியடி நடத்தினர். 3 பேருக்கு மண்டை உடைந்ததை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து, என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேச்சேரியில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது தொப்பூர் செல்லும் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. பாமகவினர் போராட்டத்தால் நெய்வேலி பகுதிக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அன்புமணி கைதை கண்டித்து பாமகவினர் போராட்டம்!: கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்து சேவை முழுமையாக நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Bamakavi ,Annmani ,Govt bus service ,Cuddalore district ,Cuddalore ,Transport Corporation ,Anbaramani ,Service ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல்கள்: அன்புமணி வலியுறுத்தல்