×

கேரள அரசு பம்பர் லாட்டரியில் நகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கு ரூ.10 கோடி முதல் பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்தநிலையில் முதல் பரிசு மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகரசபையில் பணிபுரிந்து வரும் கார்த்தியாயனி, ராதா, ஷீஜா, சந்திரிகா, பார்வதி, குட்டிமாளு, லட்சுமி, லீலா, ஷோபா, பேபி, பிந்து ஆகிய 11 பெண் தூய்மையாளர்கள் சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு கிடைத்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அந்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மாதம் ரூ.100 வசூலித்து வருகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கும். இதற்கிடையே கடந்த சில நாளுக்கு முன்பு 11 பேரும் அந்த பகுதியில் குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாட்டரி டிக்கெட் விற்பனைக்காரர், மழைக்கால பம்பர் லாட்டரி வேண்டுமா? என்று அவர்களிடம் கேட்டார்.

ஆனால் டிக்கெட் விலை ரூ.250 என்பதால் தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறினர். அப்போதுதான் அனைவரும் சேர்ந்து பணம் போட்டு டிக்கெட் வாங்கலாமே என்று யோசனை அதில் ஒருவருக்கு உதித்தது. அதற்கு அனைவரும் சம்மதித்தனர். ஆனாலும் 9 பேரிடம் மட்டுமே ரூ.25 இருந்தது. 2 பேரிடம் அந்த பணம் கூட இல்லை. இதனால் 2 பேரும் தலா ரூ.12.50 கொடுக்க தீர்மானித்தனர். இப்படி சேகரித்த ரூ.250 பணத்தை கொடுத்து ஒரு டிக்கெட்டை வாங்கினர். அந்த டிக்கெட்டுக்குத் தான் தற்போது முதல் பரிசு ரூ.10 கோடி கிடைத்து உள்ளது. ஏஜென்ட் கமிஷன், வரி நீங்கலாக இவர்களுக்கு ரூ.6.3 கோடி பணம் கிடைக்கும்.
பரிசு விழுந்த டிக்கெட்டை அங்குள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்தனர். தங்களில் யாருக்கும் சொந்தமாக வீடு இல்லை என்றும், கிடைக்கும் பணத்தில் முதலில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். லாட்டரியில் பணம் கிடைத்தாலும் தங்களது தொழிலை விட மாட்டோம் என்று அவர்கள் மிகவும் உறுதியுடன் கூறினர்.

The post கேரள அரசு பம்பர் லாட்டரியில் நகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் 11 பேருக்கு ரூ.10 கோடி முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala government ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...