×

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்டம் வருகிறதா?: ஒன்றிய சட்ட அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒன்றி அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதால், தேர்தல் நடத்தை விதிகள் நீண்ட நாள்கள் அமலில் இருக்கின்றன.

இதனால், மேம்பாட்டு நலத் திட்டங்களை செயல்படுத்துவது சவாலாக உள்ளது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 83 (நாடாளுமன்ற இரு அவைகளின் பதவிக்காலம்), பிரிவு 85 (குடியரசுத் தலைவரால் மக்களவைக் கலைக்கப்படுவது), பிரிவு 172 (மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்), பிரிவு 174 (மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது), பிரிவு 356 (மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி) உள்ளிட்ட பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்போது, அரசின் செலவினங்கள் குறையும் என்பதுடன், நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகளுக்கு அரசுப் பணியாளர்களை மீண்டும் மீண்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது குறையும். அரசியல் கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களும் அதிக நிதியைத் தேர்தலுக்காகச் செலவிடுவது தவிர்க்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

The post ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்டம் வருகிறதா?: ஒன்றிய சட்ட அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union Law ,New Delhi ,Lok Sabha ,State Assemblies ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு