×

நெய்வேலியில் பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து நெய்வேலி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்..!!

கடலூர்: நெய்வேலியில் பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து நெய்வேலி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நெய்வேலியில் ஏற்பட்ட போராட்டம் கலவரமானதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் வடமாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கடலூரிலிருந்து நெய்வேலி வழியாக திருச்சி செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்துமே பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. நெய்வேலி என்.எல்.சி பிரச்சனை தொடங்கியதிலிருந்தே பல்வேறு இடங்களில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டது. இதனிடையே பாதுகாப்பு கருதி அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூரிலிருந்து சிதம்பரம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளிலே அதிக மக்கள் பயணிக்கின்றனர்.

சிதம்பரம் வழியாக தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்லமுடியும் என்பதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்கின்றனர். கடலூரிலிருந்து புதுச்சேரி வழியாக வடமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் குறைவாக இயக்கப்பட்டு வருகிறது. என்.எல்.சி போராட்டம் காரணமாக ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் நெய்வேலிக்கு விரைந்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதிகளில் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

 

The post நெய்வேலியில் பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து நெய்வேலி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Buses ,Neyveli ,Bamaka ,Cuddalore ,Naiveli ,gaiveli ,Dinakaran ,
× RELATED நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்