×

“நான் அவரைப்போல் இருந்தால்…”

இஸ்லாமிய வாழ்வியல்

‘‘பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுகிறான். நாம் பெரு மூச்சுவிட்டு என்ன பயன்?”

“அவரைப் போல நான் இருந்திருந்தால்… நடப்பதே வேறு”- இப்படிப்பட்ட உரையாடல்களையும் ஏக்கப் பெருமூச்சுகளையும் அன்றாட வாழ்வில் பலரிடமும் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன், வசதி வாய்ப்புகளில் உயர்நிலையில் இருக்கும் பலரைப் பார்த்து நாமும்கூட அப்படி நினைத்திருக்கலாம் – “அவரைப் போல் நாம் இல்லையே.”

இத்தகைய எண்ணம்கொள்வது சரியா? நற்பணிகளில் ஈடுபடுபவர்களைப் பார்த்து, புண்ணியச் செயல்களை மேற்கொள்பவர்களைப் பார்த்து, “நமக்கு வசதி வாய்ப்பு இருந்தால் அப்படிச் செய்திருக்கலாமே” என்று ஒருவர் ஏங்குகிறார். தவறான வழிகள் மூலம் பொருள் ஈட்டி, மோசடித்தனங்களில் ஈடுபட்டு உயர்நிலைக்கு வந்தவர்களைப் பார்த்து, ஆஹா… நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரைப் போல் உயர்ந்திருக்கலாமே” என்று ஒருவர் நினைக்கிறார்.

இந்த இருவகையான எண்ணங்களுக்கும் மறுமையில் அவற்றுக்குரிய நற்கூலியோ தண்டனையோ கிடைக்கும் என்கிறது இஸ்லாமிய வாழ்வியல். நபிகளார்(ஸல்) அவர்கள் இந்தக் கருத்தை நான்கு மனிதர்களை எடுத்துக் காட்டுகளாய்த் தந்து அழகாக விளக்கினார்.

1. ஒருவருக்கு இறைவன் செல்வத்தையும் கல்வியையும் ஒருசேரக் கொடுத்தான். அவர் தம் கல்விக்கேற்பத் தம் செல்வத்தைச் செலவு செய்கிறார். செல்வத்தை அதற்குரிய முறையில் செலவிடுகிறார்.

2. ஒருவருக்கு இறைவன் கல்வியைக் கொடுத்தான். செல்வத்தைக் கொடுக்கவில்லை. அப்போது அவர், “இவருக்குத் தரப்பட்டதைப் போல் எனக்கும் செல்வம் இருந்திருந்தால் அவரைப் போலவே நானும் உரிய வழிகளில் செலவு செய்திருப்பேன்” என்று கூறுகிறார். எனவே இருவரும் சமமான நற்கூலியைப் பெறுவார்கள்.

3. ஒருவருக்கு இறைவன் செல்வத்தைக் கொடுத்தான். கல்வியைக் கொடுக்கவில்லை. அவர் தம் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்கிறார். (தவறான வழிகளிலும்) தேவையில்லாதவற்றிலும் செலவிடுகிறார்.

4. ஒருவருக்கு இறைவன் கல்வியையும் கொடுக்கவில்லை, செல்வத்தையும் கொடுக்கவில்லை. அப்போது அவர், “இவரிடம் (மூன்றாமவரிடம்) இருப்பதைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன்” என்று கூறுகிறார். எனவே இந்த இருவரும் பாவத்தில் சமம் ஆனவர்கள் ஆவர்.” (ஆதார நூல் – திர்மிதீ,மஆலிமுஸ் ஸுன்னா)

“அவரைப் போல் நான் இருந்தால்” என்று எண்ணம் கொள்வதற்கு இதுதான் அளவுகோல்.

கல்வியிலும் இறைபக்தியிலும், தான – தர்மம் வழங்குவதிலும் பிறருக்கு உதவுவதிலும் சிறந்து விளங்குபவரைப் பார்த்து, அவரைப் போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவரைப் போல் செயல்படுவேனே” என்று நல்லெண்ணம் கொண்டால் நற்கூலி உண்டு.

மாறாக, தீயவர்களைப் பார்த்து, அவர்களின் தில்லுமுல்லு சாமர்த்தியங்களைப் பார்த்து, “ஆஹா நாமும் அவர் போல் இருந்தால்” என்று எண்ணினால் பாவத்தில் கூட்டாளி ஆகி பாழ்நரகில் விழ வேண்டியதுதான்.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“இறைவனின் உவப்பை நாடி, அவனுக்காகச் செய்யப்படும் நற்செயல்களை மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்வான்.”- நபிமொழி

The post “நான் அவரைப்போல் இருந்தால்…” appeared first on Dinakaran.

Tags : Peru ,
× RELATED பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5...