×

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிடுக: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, அரசு மருத்துவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். உலகம் முழுவதும் 2020 -ஆம் ஆண்டு முதல் 2022 -ம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் தங்களது இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவையாற்றினார்கள். தெருவுக்கு தெரு ஆயிரம் ஆயிரம் என கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மணிக்கொருமுறை பல்கிப் பெருகியது.

நாடு முழுவதும் கொரோனா பேரச்சம் நிலவி வந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் இருந்த அனைரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட முன்வரலாம் என முந்தைய தமிழக அரசு அறிவிப்பு செய்தது. இந்த அறிவிப்பை ஏற்று, மருத்துவப் பணியாற்றிட வந்த நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் குறைந்தபட்சம் நூறு நாட்கள் பணியாற்றினாலே, அவர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்கலாம் என ஒன்றிய அரசின் மருத்துவத் துறை 2021 – ஆம் ஆண்டு மே 3- ஆம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால், கடந்த ஆட்சியில் இந்த மருத்துவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு வழங்காமல் தற்காலிகமாக பணி வழங்கியதால், இன்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அரசு மருத்துவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரலில் தேர்வு நடத்தி முடித்துள்ளது.

இந்தத் தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆணையால், தமிழ்நாட்டு மருத்துவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கான வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அதேபோல, கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி, தற்போது பணி வாய்ப்பு இல்லாமலும், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, சிறப்பு மதிப்பெண்கள் வழங்கி, அரசு பணி வாய்ப்பு வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிடுக: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Corona disaster ,Vaiko ,Tamil Nadu government ,Chennai ,corona crisis ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு...