×

ஆடி காற்றில் ஆட்டம் காணும் பழநி கோயில் ரோப்கார்

*2வது ரோப்கார் திட்டத்தை விரைவுபடுத்த பக்தர்கள் கோரிக்கை

பழநி : காற்று காலங்களில் பழநி கோயில் ரோப்காரை இயக்க முடியாததால் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச்சும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முதலில் பழநி கோயிலில்தான் ரோப்கார் அமைக்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 2004ல் துவங்கப்பட்ட தற்போதைய ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். ஜிக்- பேக் முறையில் மேலே செல்லும் போது 12 பேரும், கீழே இறங்கும் போது 12 பேரும் மட்டுமே பயணிக்க முடியும். 1 மணிநேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே தற்போதைய ரோப்காரில் பயணிக்க முடியும். இதனால் வார விடுமுறை தினம், கார்த்திகை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. தவிர, மழை மற்றும் காற்று காலங்களில் தற்போதைய ரோப்காரை இயக்க முடியாது. இதனால் பெண்கள், வயதானோர் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே, பழநி கோயிலுக்கு கூடுதலாக 2வது ரோப்கார் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்டகால போராட்டத்திற்கு பின் சுமார் ரூ.72 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள ரோப்கார் நவீன வசதிகளுடன் 1 மணிநேரத்தில் சுமார் 1200 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மழை மற்றும் காற்று காலங்களிலும் தடையின்றி இயக்க முடியும்.

ஆனால், தற்போது இப்பணி நடைபெறாமல் முடங்கிப்போய் உள்ளது. தற்போதுள்ள ரோப்காரை லேசான காற்று வீசினாலே பல மணிநேரம் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முடங்கி கிடக்கும் 2வது ரோப்கார் திட்டத்தை உயிரூட்ட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆடி காற்றில் ஆட்டம் காணும் பழநி கோயில் ரோப்கார் appeared first on Dinakaran.

Tags : Ropkar ,Palani ,Audi ,Phalani temple ,Palani Temple ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை