×

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆவடி சிறப்பு காவல்படை காவலருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சீட்: டாக்டர் கனவு நனவாக போவதாக மகிழ்ச்சி

சென்னை: ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி இன்பவள்ளி. இவர்களுக்கு சிவராஜ் (23) உள்பட 3 மகன், ஒரு மகள் உள்ளனர். 3வது மகனான சிவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து கடந்த 2016ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி 915 மதிப்பெண் பெற்றார். இவருக்கு மருத்துவம் படிக்க ஆசையாக இருந்தது. ஆனால் கட்ஆப் மார்க் குறைவாக இருந்ததால் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து பிஎஸ்சி படித்து முடித்த அவர் 2020ம் ஆண்டு 2ம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இருப்பினும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்து வந்தது. இதற்காக நீட் தேர்வு எழுத, காவலராக பணியாற்றி கொண்டே படித்து வந்தார். கடந்தாண்டு எழுதிய நீட் தேர்வில் 263 மதிப்பெண் எடுத்தார். ஆனால் அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டும் நீட் தேர்வு எழுதிய சிவராஜ், 400 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் அவருக்கு கிடைத்தது. கவுன்சிலிங்கில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. சிவராஜின் பெற்றோர் முதுகம்பட்டியில் வசித்து வருகின்றனர்.

படிப்பறிவு இல்லாத ஏழை கூலி தொழிலாளிகளான இவர்கள், மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தனர். சிவராஜின் தம்பி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம்ஆண்டு படித்து வருகிறார். லட்சியத்துடன் படித்து நீட்தேர்வு எழுதி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர உள்ள சிவராஜ் கூறுகையில், எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. பெற்றோருக்கு எழுத படிக்க தெரியாது. என்னுடன் பிறந்தவர்கள் 3 பேர். இதில் அண்ணன் தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். பிளஸ் 2 வரை படித்துள்ள எனது அக்காளுக்கு திருமணமாகி விட்டது. தம்பி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். ஏழ்மை காரணமாக நான் மேற்கொண்டு படிக்க முடியால் தேர்வு எழுதி காவலர் பணியில் சேர்ந்தேன். இருப்பினும் எனக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் நான் நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தேன். நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் வேலை பளுவிற்கும் இடையே படித்து வந்தேன். 400 மதிப்பெண் எடுத்ததால் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனது கனவு நனவாக உள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

The post நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆவடி சிறப்பு காவல்படை காவலருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் சீட்: டாக்டர் கனவு நனவாக போவதாக மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Awadi ,Government Medical College for Special Guard Guard ,Dream ,Chennai ,Tamil Nadu Special Guard Guard ,Avadi ,Neddere ,Krishnagiri Government medical ,
× RELATED மோடியின் 400 சீட் கனவு தகர்ந்தது: காங். கே.சி.வேணுகோபால் பேட்டி