
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு விரைவில் முதலமைச்சராக வாய்ப்பு கிடைக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவார் மற்றும் அவரது சகாக்கள் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைந்தனர். இதை அடுத்து அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதால் அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் அஜித் பவாரை ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்திவிராஜ் சௌகான் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பலுசேர்க்கும் விதமாக அஜித் பவார் அணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்பதால் அதை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என பிரபுல் படேல் கூறினார். இருப்பினும் ஆற்றல் மிக்க தலைவரான அஜித் பவாருக்கு இன்று இல்லை என்றாலும் கூடிய விரைவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றார். பிரபுல் படேலின் இந்த கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதை மறுத்துள்ள துணை முதல்வர் தேவேந்திர பத்னாவிசு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நீடிப்பார் என்று கூறியுள்ளார். இதனிடையே தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பரஸ்பரம் சரத்பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளனர். எனவே இரு தரப்பும் ஆகஸ்ட் 17ம் தேதி இதற்கு விரிவாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post அஜித் பவாருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும்: பிரபுல் படேல் சர்ச்சைக் கருத்தால் கூட்டணியில் சலசலப்பு appeared first on Dinakaran.