×

நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகராட்சி மின் மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை வண்ணார்பேட்டை அம்பேத்கர் குடியிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். பந்தல் தொழிலாளி. இவரது மனைவி சோனியா. இவர்களது 2வது மகள் சத்யா (7). உடையார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென கைகளை கழுவ அருகில் இருந்த மாநகராட்சி தண்ணீர் ஏற்றும் அறையில் உள்ள குழாயை தொட்டுள்ளார். அப்போது அதில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சிறுமி மீது மின்சாரம் தாக்கியதால் சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது அவர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பாளை போலீசார் சிறுமி சத்யா உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்சார விபத்துக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், மின் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று சிறுமி உடலை வாங்க மறுத்து தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாளை. இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து நெல்லை – மதுரை வடக்கு புறவழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வடக்கு புறவழிச்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

மறியலில் ஈடுபட்ட பலியான சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், மாநகராட்சி தண்ணீர் ஏற்றும் அறையில் சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் நடந்து 25 மணி நேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றனர்.

இதைதொடர்ந்து பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப், மாநகர திமுக துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மாநகராட்சி உதவி கமிஷனர் லெனின் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

The post நெல்லையில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cousins ,Nella Vanarpet ,
× RELATED 95 வயது மூதாட்டி எரித்துக் கொலை