×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு பாபநாசம் வனசோதனை சாவடியில் தீவிர சோதனை

*மதுவுடன் வந்தவர்களுக்கு அபராதம்

விகேபுரம் : பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருவிகளில் ஒன்றான அகஸ்தியர் அருவி உள்ளது. இதை தவிர்த்து மலையின் மேல்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். தற்போது ஆடி மாதம் என்பதால் அருவிகளில் குளிக்கவும், கோயிலுக்கு பக்தர்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். இதனால், நேற்று முதல் பாபநாசம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா அறிவுறுத்தலின்படி பாபநாசம் வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் காரையாறு மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவற்றை கொண்டு வருவதை தடுக்க பாபநாசம் வன சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். இந்த சோதனையின் போது சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு பறிமுதல் செய்தனர். அதே ேநரத்தில் மதுபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து அழிப்பதோடு கொண்டு வருபவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எனவே சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். காரையாறு கோயிலுக்கோ, அகஸ்தியர் அருவிக்கோ செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களையோ, மது பாட்டிலையோ கொண்டு வர வேண்டாம். தடையை மீறி கொண்டு வந்தால் அபராதம் வசூலிக்கப்படும்’ என்றனர்.

The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு பாபநாசம் வனசோதனை சாவடியில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Papanasam forest ,Vikepuram ,Papanasam ,Western Ghats ,Agasthiyar… ,Dinakaran ,
× RELATED மின் சிக்கனம், பாதுகாப்பு துண்டுபிரசுரங்கள் வழங்கல்