×

திண்டிவனம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக கோயிலை அகற்ற எதிர்ப்பு மக்கள் திடீர் சாலை மறியல்

திண்டிவனம், ஜூலை 28: திண்டிவனம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலை இருவழிப்பாதையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் அதிகளவு கிரஷர்கள் மற்றும் கல்குவாரிகள் இயங்கி வருவதால் அதிகமான போக்குவரத்து உள்ளது. அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த சாலையை அகலப்படுத்த உத்தரவிட்டார். இதனை ெதாடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்க பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், மரங்கள் அகற்றும் பணி நடந்தது. இதில், திண்டிவனம் அருகே மானூர் பகுதியில் உள்ள பச்சைவாழியம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் மாற்று இடம் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மாற்று இடம் வழங்காததால் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயில் எதிரே மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் மற்றும் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலெக்சாண்டர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பின்னர், மாற்று இடம் வழங்குவது தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தி சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திண்டிவனம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக கோயிலை அகற்ற எதிர்ப்பு மக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Tindivanam ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது