×

மணிப்பூர் விவகாரத்தில் தொடர் போராட்டம் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் ஏற்பட்ட தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கின. எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரம் மற்றும் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி கும்பல் ஊர்வலம் நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒன்றிய பா.ஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டுள்ளார். 10 நாட்களுக்குள் அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் நேற்று மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம்பிர்லா கேள்வி நேரத்தை எடுத்துக்கொண்டார்.

அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கருப்பு உடையில் வந்து இருந்தனர். சிலர் கருப்பு பட்டைகளை கட்டியிருந்தனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் நின்றனர். இதை சபாநாயகர் ஓம்பிர்லா கண்டித்தார். ஆனால் அமளி குறையாததால் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினரின் ஒரு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, ​​எதிர்ப்புத் தெரிவித்த சில உறுப்பினர்கள் அவருக்கு அருகில் நின்று பதாகைகளைக் காட்டினர். மேலும் கூச்சல் தொடர்ந்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது திடீரென அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கிழிந்த காகிதங்களை சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினார். இதையடுத்து அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு அவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்தச் சம்பவத்தை எழுப்பி, உறுப்பினரின் பெயரை குறிப்பிடுமாறு அவைத்தலைவரிடம் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா மற்றும் கடல் கனிம வள மசோதா ஆகிய 2 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை: மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் கடும் அமளியை உருவாக்கியது. ஆளும்கட்சியினர் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள். எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா, இந்தியா என்று கோஷம் எழுப்பினார்கள். குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் போது கடும் அமளி உருவானது. இதனால் முதலில் 12 மணி வரையும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை வெளியிட்டபோது, ​​எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் பிரச்னையில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜெய்சங்கரின் அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஆளும் பாஜ உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பி, அவரது உரையை தடுத்தனர். அப்ேபாது கார்கே, ‘எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை, ஆளும் கட்சி தடுப்பதை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் பேசுவதை அரசே தடுக்கிறது’ என்றார். தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை கூடியபோது ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களுக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2023ஐ அவையில் தாக்கல் செய்தார். அப்போது கார்கே பேச முயன்ற போது, மசோதா மீது மட்டுமே பேச வேண்டும் என்று அவைத்துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கூறி, கார்கேவுக்கு அனுமதி அளிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post மணிப்பூர் விவகாரத்தில் தொடர் போராட்டம் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின appeared first on Dinakaran.

Tags : Manipur ,houses of Parliament ,New Delhi ,Amali ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...