×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியது: கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்களில், சிறப்பு பிரிவினர், அரசின் 7.5 சதவீத இடங்களில் தேர்வு பெற்றோருக்கான கவுன்சலிங் கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர 40 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், மேற்கண்ட கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6,326 எம்பிபிஎஸ் இடங்கள், 1,768 பிடிஎஸ் இடங்களும், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,461 எம்பிபிஎஸ் இடங்கள், 5,460 பிடிஎஸ் இடங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீடுகளை பெறும் மாணவ மாணவியருக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. இதற்காக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனைக் கட்டிடத்தில் முதல் முறையாக கவுன்சலிங் நேற்று தொடங்கியது. இதில், விளையாட்டு வீரர்கள் 25, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 25, மாற்றுத் திறனாளிகள் 80 பேர் என் மொத்தம் 130 பேருக்கும், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 1,450 பேரும் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். நீட் தேர்வில் 569 முதல் 285 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர்கள் 630 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 2,363 பேர் நேற்றைய கவுன்சலிங்கில் இடம் பெற்றனர். புதிய மாணவர்களை விட கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,363 பேர் மருத்துவ கவுன்சலிங்கில் மீண்டும் கலந்து கொண்டு இட ஒதுக்கீடுகளை பெற்றனர். இதனால் நேற்றைய கவுன்சலிங்கில் புதியவர்கள் ஒரு சிலரைத் தவிர பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து நடக்க இருக்கின்ற பொதுப் பிரிவு கவுன்சலிங்கில் புதிய மாணவர்கள்( 2023ம் ஆண்டுதேர்வு எழுதியோர்) மற்றும் இதர மாணவர்கள் 8426 பேரும், பழைய மாணவர்கள் என 17 ஆயிரத்து 430 பேரும் பங்கேற்க உள்ளனர். இதனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலான இடங்கள் பழைய மாணவர்களுக்கே செல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு 7.5% சீட் கிடைப்பது சந்தேகம். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து தனியார் பயிற்சிமையங்களில் கட்டணம் செலுத்தி நீட் தேர்வை இரண்டு முறை எழுதிய பல மாணவ மாணவியர் நேற்றைய கவுன்சலிங் அதிக இடங்களை அள்ளிச் செல்ல முடிந்தது. மேலும், சென்னை, சேலம் போன்ற நகரங்களில் இயங்கும் சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவ மாணவியரே அதிக அளவில் நேற்றைய கவுன்சலிங்கில் இடங்களை தட்டிச் சென்றனர்.

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கியது: கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,Kalainar High Treatment Hospital ,Chennai ,
× RELATED எம்பிபிஎஸ் மாணவி மாயம்