×

ரஷ்ய விண்வெளி மையத்திற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: இ.கருணாநிதி எம்எல்ஏ வழங்கினார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இருந்து ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட செல்லும் மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவியை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கினார். கொரோனாவில் வீட்டில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களை செறிவூட்டும் வகையில், அவர்களின் திறமைகளை மேம்படுத்த, விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில், \”ராக்கெட் சைன்ஸ்\” என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் 2022 ஜனவரி 26ம்தேதி நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். இத்திட்டத்தில் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, 15 வகுப்புகள் நடத்தப்பட்டு, 2022 ஏப்ரல் 2ம்தேதி முதல் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 500 மாணவர்களில் 220 பேர், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை ஆன்லைன் வகுப்பும், தொடர்ந்து கேள்வி நேரமும் நடத்தப்பட்டது. பயிற்சியில் வருகை பதிவேடு, வினாடி – வினா, குறுகிய வினாவிடை மூலம் 130 மாணவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகினர். இவர்களில் 50 மாணவர்கள், தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் ஆகஸ்ட் 9ம்தேதி, ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் ரோஹித், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா, 10ம் வகுப்பு மாணவன் முகமது சதிக், 9ம் வகுப்பு மாணவன் ரக்க்ஷித், மாணவி லித்திகா ஆகிய 6 மாணவர்களும் உள்ளனர். இவர்களில் ரோஹித் என்ற மாணவன் 50 பேரில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சிறார் திரைப்பட விழாவில் தேர்வாகி ஒரு வாரம் திரைப்படம் சார்ந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்று அக்க(றை)ரை என்ற குறும்படம் இயக்கி நடித்து சிறந்த நடிப்பு திறனுக்காக விருதை பிளஸ் 1 மாணவி லத்தாஷா ராஜ்குமார் பெற்றதன் மூலம் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில், பல்லாவரம் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பத்மஸ்ரீ, சிவதாணுபிள்ளையின் அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் நடந்த ஏவுதள அறிவியல் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சியில் தேர்ச்சிபெற்ற ரோஹித், முகமது சதிக், ரக்‌ஷித், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா லித்திகா ஆகிய 6 பேரும் வரும் ஆகஸ்ட் 9ம்தேதி ரஷ்யா செல்கின்றனர்.  ரஷ்யா செல்ல அரசு மற்றும் தனியார் நிதியுதவி கிடைக்காத லித்திகா, இலக்கியாவுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் தனியார் சார்பில் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இ.கருணாநிதி எம்எல்ஏ கலந்துகொண்டு, ரஷ்ய விண்வெளி மையம் செல்லும் மாணவ, மாணவிகளை பாராட்டி, லித்திகா, இலக்கியா ஆகிய 2 பேருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரஷ்ய விண்வெளி மையத்திற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: இ.கருணாநிதி எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Russian Space ,Center ,E. Karunanidhi ,MLA ,TAMBARUM ,Pallavaram ,Thambaram Municipal High School ,E. Karunanidi ,
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...