×

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.85 கோடி மதிப்புள்ள 85 ஏக்கர் நிலம் மீட்பு

நெல்லை: சேரன்மகாதேவி அருகே 9.87 லட்சம் லிட்டர் நெல் குத்தகை பாக்கியாக வைத்திருந்தவர்களிடம் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.85 கோடி மதிப்புள்ள 84.91 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை நிலங்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு உள்ளன. இவை கோயிலுக்கு வருமானம் கருதி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டத்தில் சுப்பிரமணியபுரம், ஓமநல்லூர் பகுதியில் 84.91 ஏக்கர் நஞ்சை நிலங்களை 210 பேர் குத்தகைக்கு எடுத்திருந்தனர். அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 87 ஆயிரத்து 481 லிட்டர் நெல் குத்தகை பாக்கியாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனை செலுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தும் செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை மூலம் நெல்லை வருவாய் நீதிமன்றம் தனித்துணை கலெக்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை வருவாய் நீதிமன்ற தனித்துணை கலெக்டர் தமிழரசி விசாரித்து குத்தகை பாக்கி வைத்துள்ள 210 குத்தகைதாரர்களிடம் இருந்து 84.91 ஏக்கர் நஞ்சை நிலத்தை மீட்க உத்தரவிட்டார். இதன்படி திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் ரூ.85 கோடி மதிப்புள்ள 84.91 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு திருச்செந்தூர் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.85 கோடி மதிப்புள்ள 85 ஏக்கர் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Murugan ,Temple ,Cheranmakadevi ,
× RELATED திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!