×

தமிழக பாஜ தலைவர் தலைமையில் இன்று நடைபயணம் அண்ணாமலை அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி: பாஜ தொண்டர்கள் அதிருப்தி; அதிமுக தொண்டர்கள் குஷி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காமல் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு பேசியது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனாலும் அண்ணாமலை, ஜெயலலிதா பற்றி பேசிய பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி தொடர்பாக டெல்லி மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் கூட்டணி தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். அதேநேரம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் எச்சரித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அண்ணாமலையை அமித்ஷா கடுமையாக எச்சரித்தார். ஒழுங்காக அதிமுகவுடன் கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தியுங்கள். இல்லாவிட்டால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள் என்று அப்போது எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்தே அண்ணாமலை அமைதியானார். டெல்லி மேலிடம் மிரட்டலை தொடர்ந்து தற்போது அண்ணாமலை அதிமுக தொடர்பாக கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார். ஆனால் அண்ணாமலை மீது மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில், அண்ணாமலையும் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை, இன்று (28ம் தேதி) முதல் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குகிறார். இந்த பயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியை சுற்றி சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை இன்று நடைபயணத்தை தொடங்குவதையொட்டி ராமேஸ்வரத்தில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜ நடத்தும் நடைபயணத்தில் பங்கேற்குமாறு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடந்த 24ம் தேதி (திங்கள்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார். முறைப்படி கட்சி அலுவலகத்தில் கடிதமும் கொடுத்தார். ஆனால் அண்ணாமலை நேரடியாக சந்தித்து அழைப்பு வழங்கவில்லை. பாஜ கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுக என்ற வகையிலும், ஒன்றிய உள்துறை அமைச்சரும், பாஜவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் அமித்ஷா வர உள்ளதால் எடப்பாடிக்கும் அழைப்பு விடுத்தாக கூறப்பட்டது.

தமிழகத்தில் அதிமுக – பாஜ ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் தன்னுடைய நடைபயணத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது இரண்டு கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தற்போது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று மாலை பாஜ சார்பில் அண்ணாமலை தொடங்கும் நடைபயணத்தில் எடப்பாடி பங்கேற்க மாட்டார் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவித்தபோது, ‘‘தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜ இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே அண்ணாமலை நடைபயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அவரது தலைமையில் நடைபெறும் நடைபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்து கொண்டால், தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் அதிமுக கூட்டணி ஏற்படுத்தும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் ஏற்படும். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க மாட்டார்’’ என்று கூறினர். அதேநேரம், அமித்ஷா கலந்து கொள்ளும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காமல் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது பாஜவினரைஅதிருப்தி அடைய செய்துள்ளது. தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கும், தேமுதிகவுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் இந்த நடைபயணத்தில் கலந்துகொள்வார்களா? அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி, நடைபயணத்தை புறக்கணித்துள்ளதற்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* கவர்னருடன் 15 நிமிடம் தனியாக ஆலோசனை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, நேற்று முன்தினம் அண்ணாமலை சந்தித்து பேசினார். இரண்டாம் கட்டத் தலைவர்களை வெளியில் அனுப்பி விட்டு, அண்ணாமலை மட்டும் ஆர்.என்.ரவியுடன் தனியாக 15 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளபர். இந்த ஆலோசனையின்போது நடைபயணம் குறித்து பேசியுள்ளார். அதோடு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கு அனுமதி கொடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலதம் தாழ்த்தி வருகிறார். ஆளுநர் ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள், சமூக அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

* ஓய்வு எடுக்க சொகுசு பஸ்
நடைபயணம் மேற்கொள்வதாக கூறியுள்ள அண்ணாமலை, அவர் மட்டும் ஓய்வு எடுப்பதற்காக நட்சத்திர நடிகர்கள் பயன்படுத்தும் சொகுசு பஸ் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த பஸ்சில், அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சுக்கான செலவு முழுவதையும் அவரது நண்பர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நடைபயணம் போக மீதம் உள்ள நேரங்களில் சொகுசு பஸ்சில் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் தொண்டர்கள் தங்குவதற்கு கல்யாண மண்டபம், சத்திரம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

* பாமகவும் புறக்கணிப்பு
அண்ணாமலை நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணியும் புறக்கணித்துள்ளார். அவர், இன்று நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் பாமக சார்பிலும் நடை பயண துவக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை. எடப்பாடியைப் போல பாமகவும் நடை பயணத்தை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழக பாஜ தலைவர் தலைமையில் இன்று நடைபயணம் அண்ணாமலை அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி: பாஜ தொண்டர்கள் அதிருப்தி; அதிமுக தொண்டர்கள் குஷி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Edappadi ,AIADMK ,Khushi ,Chennai ,president ,general secretary ,Edappadi Palaniswami ,Annamalai ,Tamil Nadu BJP… ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...