×

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடக்கம் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: திருச்சியில் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தை பெற கால அவகாசம் ஆக.15 வரை நீட்டிக்கப்படும் என திருச்சியில் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் திருச்சி கேர்கல்லூரில் “வேளாண் சங்கமம் 2023” மாபெரும் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு வேளாண்மை துறை சார்பில் வெள்ளி ஏர் கலப்பை, திருவள்ளுவர் சிலை நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரதீப்குமார் சிறுதானியங்களால் வரையப்பட்ட மலைக்கோட்டை வரைபடத்தை நினைவு பரிசாக வழங்கினார். இந்த கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது.

விழாவில், மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு அமைந்ததும் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம். அந்த வரிசையில்தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நமது அரசு பொறுப்பேற்று, செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022-ம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு ஒரு சாதனையை நாம் படைத்திருக்கிறோம்.

குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக 2022ல் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் எட்டியிருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நமது அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.

அந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாகதான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-24ம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக நாம் கொண்டாட இருக்கிறோம். ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதலாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில், நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு 2821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. உழவர்களிடையே காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில், 157 மின்னணு தேசிய வேளாண் சந்தைகளில் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் உழவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகளும், ஒரு தோட்டக்கலை கல்லூரியும் 40 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.

கழக அரசு அமைந்தபிறகு முதலில் ஒரு லட்சம் மின் இணைப்புகளை இலவசமாக கொடுத்தோம். பின்னர் கூடுதலாக 50 ஆயிரம் மின் இணைப்புகளைக் கொடுத்தோம். இப்போது மேலும் 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்குகிறோம். கடந்த பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது. பத்து ஆண்டுகாலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இரண்டு ஆண்டுகாலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம். ‘‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” – இது தலைவர் கலைஞரின் முழக்கம்! சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம் – இது எனது முழக்கம். அந்த வரிசையில்தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான வேளாண் வணிகத் திருவிழாவை சென்னையில் தொடங்கி வைத்தேன். இப்போது வேளாண் சங்கமத்தை இங்கே திருச்சியில் தொடங்கி வைத்திருக்கிறேன். வேளாண் துறையில் உழவர்களுக்காகச் செய்யப்பட்ட மாபெரும் முன்னெடுப்பு இது. உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இதுபோன்ற கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்துங்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். வேளாண் அறிவு என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவரும் பெற்றாக வேண்டும்.

நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை பார்த்து இந்தத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்து அது பற்றி கேட்டேன். அதாவது, இந்த ஆண்டு சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்து தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை அரசிடம் வைத்திருப்பதாக ஒரு செய்தியை பார்த்தேன். நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக அரசு ஏற்றுக்கொண்டு, ரூ.75 கோடி மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக நம்முடைய உழவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

* பாரம்பரிய நெல் சாகுபடி சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு பரிசு
வேளாண் சங்கமம் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்த பின்னர், பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கிடும் விதமாக, முதல் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டம், ரங்கசாமி சார்பாக அவர் மனைவி வீரம்மாளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், இரண்டாம் பரிசு பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு 75,000 ரூபாய்க்கான காசோலையும், மூன்றாம் பரிசு பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்திக்கு 50,000 ரூபாய்க்கான காசோலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

The post மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடக்கம் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: திருச்சியில் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Trichy ,CHENNAI ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...