×

தொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்

கூடலூர்: தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாத்தலமான வாகமண்ணில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மலைசார்ந்த இயற்கை எழில் கொண்ட பகுதிகள் அனைத்தையும் கேரள அரசு சுற்றுலாத்தலமாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. வாகமண் பகுதியில் கேரள வனத்துறையும், சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இடுக்கி மாவட்டம், ஏலப்பாறை அருகே கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த இடத்தை, விடுமுறை தினங்களான, கடந்த இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்று, பைன் மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், குரிசுமலை, முருகன்மலை ஆகியவற்றைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.வாகமண் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் பாரா கிளைடிங் போட்டி நடைபெறுகிறது. கடந்த சில நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு இங்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!