×

சேறும் சகதியுமான பழவேற்காடு பேருந்து நிறுத்தம்: பயணிகள், பொதுமக்கள் அவதி

பொன்னேரி: மழை காலங்களில் பழவேற்காடு பேருந்து நிறுத்தம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பொன்னேரி அடுத்து பழவேற்காடு பகுதி உள்ளது. இங்கு, கடலுக்கும் ஏரிக்கும் இடையே 45 மீனவ கிராமங்கள் உள்ளன. மேலும், இங்கு 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் ஏராளமான பயணிகள் பழவேற்காடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து இங்கிருந்துதான் சென்னை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், வடசென்னை பகுதிகளுக்கு அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.

மேலும், ஏராளமான சுற்றுலா பயணிகளும் இங்கு உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வந்தும் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக இந்த பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளித்து வருகின்றது. இங்குள்ள, பழவேற்காடு பஜார் மாதா சிலை அருகே பேருந்துகள் வந்து திரும்புவதாலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் குளம்போல் தேங்கி இருக்கும் இந்த சேற்றுப் பகுதியில் செல்வதால் சகதியாக தேங்கி நிற்கின்றது. இதில், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மீது சேற்று நீர் தெறித்து விழுகிறது.

இதனால், பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிற்கு வந்து மாற்று துணி அணிந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இங்கு மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால், இந்த பகுதியில் பேருந்திற்காக காத்திருந்து நிற்கும் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது இந்த அவலநிலையை அப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் அரசுத்துறை அலுவலர்கள் வரை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழவேற்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சேறும் சகதியுமான பழவேற்காடு பேருந்து நிறுத்தம்: பயணிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Muddy Palavekadu ,Ponneri ,Palavekadu ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு பகுதியில் அடையாளம்...