×

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பப்பதிவு முகாமை காஞ்சி எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக நடைபெற்று வரும் விண்ணப்பப்பதிவு சிறப்பு முகாமினை எழிலரசன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் மாற்றப்பட்டு வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. அதனால், தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, விண்ணப்பங்களின் பதிவுகளை வைத்து தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட முழுவதும் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பதிவு செய்ய வரும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, விண்ணப்பப் பதிவுகள் மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெரு, அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சிறப்பு முகாமினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகாமில் பதிவு செய்ய வரும் நபர்களிடம் விண்ணப்பத்துடன் எடுத்து வரப்படும் சான்றுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், விண்ணப்பங்களை பதிவு செய்யும் ஊழியர்களிடம் எந்த மாதிரி பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும், பதிவு செய்யும் நபர்கள் தெரிவித்த தகவல்கள் உரிய ஆவணங்களுடன் சரிபார்க்கப்படுகிறதா உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சில விண்ணப்பங்களை நேரடியாக வாங்கி அவருடைய ஆதார் எண், ரேஷன் அட்டை, மின்சார வாரிய அட்டை உள்ளிட்டவைகளை சரிபார்த்தார். மேலும், விண்ணப்பப்பதிவு செய்ய வரும் விண்ணப்பதாரருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட்டாட்சியர் புவனேஸ்வரன், திமுக நிர்வாகிகள் தீபம் சுரேஷ், வினோத்குமார், குடிமை பொருள் வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பப்பதிவு முகாமை காஞ்சி எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanchi MLA ,Artist ,Kanchipuram ,Vaikunda Perumal Temple ,Ashok Nagar ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு