×

புளியங்குடி நகராட்சி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: எலுமிச்சை, பூ விவசாயம் பாதிப்பு

புளியங்குடி: தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, டிஎன்புதுக்குடி கற்பகவீதி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி ஊழியர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை குப்பைகள், தீயிட்டு அழிப்பது அல்லது உரமாக பயன்படுத்துதற்கு டெண்டர் விடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 15 ஆண்டாக டெண்டர் விடப்படாததால் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காற்றுகாலங்களில் குப்பையில் தீப்பற்றி எரிந்து வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி குப்பை கிடங்களில் நேற்று (புதன்) தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள்,தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் தீ அடுத்தடுத்த மற்ற இடங்களில் பற்றி எரிந்தவாறு உள்ளன. தொடர்ந்து இன்று 2வது நாளாக தீப்பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிஎன்புதுக்குடி பகுதி வரை புகை மூட்டம் காணப்படுகிறது.

இதனால் ெபாது மக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைந்துள்ளதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் குப்பை கிடங்கு அருகில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை, மலர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது குப்பை கிடங்கில் தீப்பற்றி புகை மூட்டம் காணப்படுவதால் எலுமிச்சை மற்றும் மலர்விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இன்று 2வது நாளாக தீயணைப்பு படையினர் மற்றும் நகராட்சி சுகாதார ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post புளியங்குடி நகராட்சி குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ: எலுமிச்சை, பூ விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,Tenkasi District ,Karpagaveedi ,Tnputhukudi ,Dinakaran ,
× RELATED சிவகிரி அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது