×

வாணியம்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடுகல் கண்டெடுப்பு: 15ம் நூற்றாண்டை சேர்ந்தது

திருப்பத்தூர்: வாணிம்பாடி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த ஜல்லிக்கட்டு நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்கக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் நெடுஞ்செழியன், காணிநிலம் முனிசாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் நடத்திய கள ஆய்வில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூர் கிராமத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: வாணியம்பாடிக்கு அருகேயுள்ள புல்லூர் கிராமத்தில் கி.பி. 15ம் நூற்றாண்டை சேர்ந்த ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு கும்பல் வட்டம் என்றழைக்கின்றனர். இந்த நடுகல் 5.4 அடி உயரமும், 3.7 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான பலகை கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் வீரனின் உருவம் 3 அடியில் செதுக்கப்பட்டுள்ளது. காளை மாட்டின் உருவம் 2.7 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் வலது கையில் குறுவாள் ஒன்றை வைத்துள்ளான். இடது கையில் காளையின் கொம்புகளை பிடித்துள்ளான். காளையின் கொம்புகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காதின் அமைப்பும் அழகாக உள்ளது. நடுகல்லின் மேற்பகுதி திருவாச்சி அலங்காரத்துடன் உள்ளது. வீரனின் வலது பக்கத்தில் கள்குடம் (கெண்டி) ஒன்றுள்ளது. இது இவ்வீரனுக்குப் படையலாக வைக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடிக்கு அருகே உள்ள புல்லூர் கிராமம் தமிழகத்தின் எல்லைப் பகுதியாகும். இதற்கு அருகே ஆந்திர மாநிலம் தொடங்குகிது. அடர்ந்த காடுகளும், தொடர் மலைகளும் இப்பகுதியில் உள்ளதால் ஆநிரைகள் (ஆடு, மாடுகள்) வளர்ப்பு பகுதியாக இருந்திருக்கிறது.

இங்கே மாடுகளுடன் வீரப்போர் எனப்படும் ஜல்லிக்கட்டை தமிழ் மறவர்கள் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஜல்லிக்கட்டில் காளையுடன் சண்டையிட்டு வெற்றிப்பெற்ற வீரனுக்கு நடுகல் நட்டுள்ளனர். இந்நடுகல்லுக்கு எவ்வித வழிபாடும் நடைபெறவில்லை. இதற்கு முன் திருப்பத்தூருக்கு அருகே உள்ள அம்மணாங்கோயில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடுகல் ஒன்றைக் கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியத்தில் கலித்தொகை நூலில் ஏறு தழுவல் (காளை மாட்டினை அடக்குதல்) குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ன. சிந்து வெளியிலும் மாட்டுடன் சண்டையிடும் வீரனின் புடைப்புச் சிற்பமும் கிடைத்துள்ளது. மதுரையில் இன்றும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எருதுகட்டு என்னும் பெயரில் இன்றும் இந்த வீரவிளையாட்டு நடைபெறுகிறது. தமிழரின் பண்பாட்டை இந்த ஜல்லிக்கட்டு நடுகல் தாங்கி நிற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வாணியம்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடுகல் கண்டெடுப்பு: 15ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,Vanimbadi ,Tirupattur Thuya Nengkak College ,Vaniyampadi ,
× RELATED 1,250 டன் ரேஷன் அரிசி காட்பாடி வருகை...