×

சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக பிஎப்ஐ மாநில மாஜி தலைவர், நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக நிதி உதவி வழங்கியதாக ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு நிதி உதவி அளித்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான 15 மாநிலங்களில் 93 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ெசப்டம்பர் மாதம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தமிழகத்தில் 8க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைதொடர்ந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின் படி, ஒன்றிய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது. அதேரேம், என்ஐஏ நடத்திய சோதனையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து பல கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனது விசாரணையை தற்போது தொடங்கி உள்ளது.

அதன் முதற்கட்டமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம், முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் வீடு, புரசைவாக்கம் தாக்கர் தெருவில் உள்ள துரப் என்பவரின் வீடு, வேப்பேரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் உள்ள இஸ்மாயில் அக்சர் என்பவர் வீடுகள் என சென்னையில் 3 இடங்களில் தற்போது சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனையின் போது, வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் சோதனை முடிவுக்கு பிறகு தான் கைப்பற்றப்பட்ட அவணங்கள் குறித்து முழுமையாக தகவல் தெரியவரும். தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக பிஎப்ஐ மாநில மாஜி தலைவர், நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Maji ,BFI ,Chennai ,Popular Front ,Union government ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்