×

ஈக்வடாரில் பயங்கரம்; சிறையில் கைதிகள் ஆயுதங்களால் பயங்கர மோதல்; 31 பேர் பலி

குவிட்டோ: ஈக்வடாரில் உள்ள சிறை கைதிகள் இரு பிரிவினராக பிரிந்து மோதி கொண்டனர். இதில் 31 பேர் பலியானார்கள். தென் அமெரிக்கா நாடாக ஈக்வடாரில் கொலை, கொள்ளை, பயங்கரவாதம், ஊழல், குடும்ப வன்முறை உள்ளிட்ட ஏராளமான குற்றங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஈக்வடார் முதன்மை வகிக்கிறது. குற்றத்தை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் குறையவில்லை. இதனால் பெரும்பாலான சிறைகள் நிரம்பி வழிகிறது. அங்குள்ள சிறைகளின் நிர்வாகத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் நாட்டில் போலீசார் எண்ணிக்கையும் குறைவு. சிறைகளுக்குள் படுகொலை, பணப்பறிப்பு உள்ளிட்ட செயல்கள் சாதாரணமாக அரங்கேறும்.

இதனால் அவ்வப்போது கைதிகள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழு தலைவர்களாக வலம் வருபவர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சமூக விரோத கும்பல், இருதரப்பினராக பிரிந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது. கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு கொண்டனர். இதனால் போலீசார் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்தனர்.

சிறைத்துறை அதிகாரிகள், ராணுவத்தின் உதவியை நாடினர். அதன்படி கலவரத்தை ஒடுக்க சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமான போலீசார் படுகாயமடைந்தனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். சேதமடைந்த சிறை அறைகள், வளாகங்கள், சிறைச்சாலை உபகரணங்கள் ஆகியவற்றை சீர்ப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

The post ஈக்வடாரில் பயங்கரம்; சிறையில் கைதிகள் ஆயுதங்களால் பயங்கர மோதல்; 31 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ecuador ,Quito ,Dinakaran ,
× RELATED சிக்கல்களைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு!