×

ஆடி அம்மனின் பரவச தரிசனம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அம்மன்குடி துர்க்கை

மகிஷனை வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்‘ என அழைத்தனர். இத்தல மூலவரான கைலாசநாதருக்கு இணையாக பக்கத்திலேயே தனிச் சந்நதியில் அஷ்டபுஜ துர்க்கை அருள்பாலிக்கிறாள்.

ராஜராஜ சோழனின் அமைச்சரான பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகைப் பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – உப்பிலியப்பன் கோயில் -அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்குச் செல்லலாம்.

செல்லப்பிராட்டி – லலிதா செல்வாம்பிகை

லலிதம் என்றாலே இதமானது, அழகானது என்று பொருள். லலிதாம்பிகையை மகாசக்தியும் பேரழுகும் ஒருங்கே பெற்றவள். அப்படித்தான் இந்த தலத்தில் அருளும் அம்மனும் கருவறையில் விளங்குகிறாள். ஆனால், உருவத்தோடு அல்ல. சக்தியின் அம்சத்தோடு… அதாவது செவ்வக வடிவ கருங்கல்தான் இங்கு லலிதா செல்வாம்பிகை. நான்கடி உயரமும், இரண்டடி அகலமுமான கற்பலகைக்குள் லலிதா எனும் ஆதிசக்தி எழுந்தருளியிருக்கிறாள். ஆயிரம் வருடங்களாக இப்படித்தான் அருள்கிறாள். நாமாக விக்ரகங்கள் அமைத்து அதற்குள் சக்தியை அமரவைப்பது என்பது வேறு. சிறு மனைப் பலகையில் அமர்ந்த சுமங்கலி பெண் போல், ‘நான் இருக்க இந்த கல்லே போதும்’ என்று எளிமையாக வீற்றிருக்கிறாள்.

மந்திர பீஜாட்சரங்களை கல்லின் மீது பொறித்துள்ளனர். கருவறையை நெருங்கும்போதே உடல் சிலிர்த்துப்போகும். ஸ்ரீராமர் பிறக்க தசரத சக்ரவர்த்திக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுத்த ரிஷ்ய சிருங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி இவள். குழந்தை பாக்கியம் கிட்டுவதற்காக வந்து வேண்டிக்கொள்கிறார்கள். மூலவராக லலிதை கற்பலகையில் அருளினாலும், உற்சவ மூர்த்தியாக பேரழகு வாய்ந்த லலிதா செல்வாம்பிகை சிலையை நிறுவியிருக்கிறார்கள். திண்டிவனம் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையிலுள்ள செஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருவாரூர் கமலாம்பிகை

இத்தலத்தை போற்றிப் பாட யுகங்கள் போதாது. அத்தனை பெருமை பெற்ற தலமிது. பஞ்சபூத தலங்களில் பிருத்வி எனும் நிலத்திற்குரிய தலமாக இது விளங்குகிறது. இச்சந்நதியின் வலது பக்கத்தில்தான் தியாகராஜர் சந்நதி அமைந்துள்ளது. மூலவருக்கு இணையான தொன்மையும், புகழும் பெற்றவராக தியாகேசர் விளங்குகிறார். இந்திரன் வழிபட்ட இறைவன் ஆவார். திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிராகாரத்தின் வடமேற்குத் திசையில் தனிக்கோயிலில் ஞானசக்தி பீடமாக கமலாம்பிகை தவக்கோலத்தில் காட்சி தருகின்றாள். பராசக்தி பீடங்களில் முதலாவதான இதில், அன்னை தன் வலதுகரத்தில் மலர் ஏந்தியும், இடதுகரத்தை இடையில் வைத்தும் தனது கால்களை யோக நிலையில் வைத்தும் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும்.

இரண்டாம் பிராகாரம் வந்தால் அங்கே தெற்கு முகமாகக் காட்சி தரும் நீலோத்பலாம்பிகை எனும் அல்லியங்கோதையை தரிசிக்கலாம். கையில் பூச்செண்டு ஒன்றைத் தாங்கி நிற்கும் இந்த அல்லியங்கோதையின் பக்கத்தில் தோழி ஒருத்தி தன் தோள்மீது முருகனைத் தாங்கி நிற்பதும், அம்மை தனது இடக்கரத்தால் முருகனின் சுட்டுவிரலைப் பிடித்திருப்பதும் காணவேண்டிய அபூர்வக் காட்சியாகும்.

பட்டீஸ்வரம் துர்க்கை

தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, இங்கு ஈசனை பூஜித்ததால் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் சுமார் ஆறடி உயரமுள்ள துர்க்காம்பிகை பேரழகு பொங்க நின்ற கோலத்தில் அருள்கிறாள். பல லட்சம் குடும்பங்களின் குலதேவதை இவள். சோழர்கள் காலத்தில் பழையாறை கோட்டையில் இருந்தவளை, சோழ மன்னர்களின் காலத்திற்குப் பிறகு இக்கோயிலில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

சாந்த வடிவத்தோடு அருளும் அன்னைக்கு எட்டுத் திருக்கரங்கள். துர்க்கையின் கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்றவற்றை ஏந்தி வலக்கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தி அருள்கிறாள். முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்க கையில் கிளி ஏந்தி அன்னை மீனாட்சியைப் போல தரிசனம் தருகிறாள். பராசக்தி இத்தலத்தில் தவம்புரிந்த போது ஈசன் ஜடாமுடியோடு காட்சி தந்தார். கும்பகோணத்திற்குத் தென்மேற்கே 8 கி.மீ தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் பங்காரு காமாட்சி

ஆதியில் காஞ்சித் தலத்தில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சொர்ண விக்ரகமே சொர்ண காமாட்சியாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி அது. அந்நியர் படையெடுப்பாலும், வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் சொல்லொணாத் துன்பம் கொண்டிருந்தன. ‘திருக்கோயில்களின் விக்ரகத்தில் ஏதுமில்லை, அதைத் தூக்கியெறியுங்கள்’ என்று கோரத்தாண்டவமாடினர். அப்போதைய காஞ்சி பீடாதிபதியுடன் கோயில் நிர்வாகிகள் சொர்ண காமாட்சியை பத்திரமாக சுற்றி கையில் எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்பளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சொர்ண காமாட்சி அருளை இறைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள்.

அப்போது தஞ்சையை மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் ஆட்சிபுரிந்து வந்தான். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று மன்னன் பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு…. நா பங்காரு…” என்று தெலுங்கில் பரவசப்பட்டான். பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. பங்காரு காமாட்சிக்கு கோயிலும் கட்டப்பட்டது. கிளியைத் தாங்கி நிற்கும் கையும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் ஒயிலும், நம்மை பிரமிக்கச் செய்கின்றன. தஞ்சை நகரத்தின் மையத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது.

சென்னை -மயிலாப்பூர் கோலவிழியம்மன்

மயிலையின் மைய தெய்வங்களில் இவளும் ஒருத்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆலயம் என்பதை கோலவிழியம்மனின் உற்சவத் திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்திருக்கிறார்கள். சோழர்காலத்திய ஆலயம். திருமயிலையின் கிராம தேவதையாக பேரருள் புரிந்துவருகிறாள் இந்த அன்னை. சுனாமி வந்த போது கடற்கரையோரம் வசித்த மக்கள் ஓடி வந்து தஞ்சம் புகுந்தது இந்த அன்னையின் ஆலயத்தில்தான்.

ஒரு சமயம் கயிலங்கிரியில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்த போது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகில் கவனம் செலுத்தினாள் உமை. அதனால் கோபம்கொண்ட ஈசன் தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான். பூவுலகில் திருமயிலையில் அன்னை மயிலுருவாய் மாறி ஈசனை துதித்து வந்தாள். அப்போது, இப்பகுதியில் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தன. நல்லோர் பாதிக்கப்பட்டனர்.

அதனால் ஈசன் மகாகாளியை மயிலையின் காவல்தெய்வமாய், மயிலுக்கும் காவலாய் அமர்ந்து எல்லையையும், பக்தர்களையும் காக்க ஆணையிட்டான். ஈசனின் ஆணைப்படி மயானத்தை நோக்கி அமர்ந்தவண்ணம் அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள் கோலவிழியம்மன். இறைவிக்கு முன் கல்லினாலான சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அபிஷேகங்கள் எல்லாம் இந்த தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக் கடன்கள் தீர்ந்துவிடுவதாக ஐதீகம். மயிலையில் கோபதி நாராயணசாமி சாலையில் இந்த ஆலயம் உள்ளது.

நாகப்பட்டினம் – நெல்லுக்கடை மாரியம்மன்

காரிருள் வேளை. எங்கும் அடைமழை. அதுவோ நெல்லுக்கடை. வணிகர் ஒருவர் நெல்லுக்கடையை மூடிவிட்டு வீடு திரும்ப தயாரானார். ஒரு பெண் சட்டென்று கடையருகே ஒதுங்கினாள். இன்று இரவு நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்றாள். முதலில் வணிகர் முடியாது என்றார்.

நான் வேறெங்கும் செல்ல முடியாது என்று பணிவோடு கேட்டாள். எப்படி ஒரு பெண்ணை நம்பி தனியே கடையை விட்டு என்று வணிகர் யோசித்தார். அந்தப் பெண்மணியிடம், ‘‘நான் கடையைப் பூட்டி விட்டுத்தான் போவேன்’’ என்றார். அந்த பெண்ணும் சரியென்றாள். மறுநாள் காலையிலேயே வணிகர் கடையைத் திறந்தார். அந்தப் பெண்மணியை காணவில்லை. அதிர்ந்தார். ஆனால், சற்றே கடைக்குள் பார்வையைத் திருப்ப ஆச்சரியத்தில் உறைந்தே போனார். வந்த பெண்ணே அம்மன் சிலையாக காட்சி தந்தாள். அம்மனே இப்படி தன் கடைக்கு வந்து லீலையை நடத்தியிருக்கிறாளே என்று குலுங்கி அழுதார்.

நெல்லுக்கடையை அப்படியே ஆலயமாக்கினார்கள். எனவே, இந்த கோயிலை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்றழைத்தார்கள். இக்கோயிலில் நடைபெறும் செடில் திருவிழா மிகவும் பிரபலமானது. அப்போது செடிலில் குறைந்தது 5000 குழந்தைகளாவது ஆசிபெறும் ஆச்சரிய நிகழ்வை காணலாம். நாகை நகரத்தின் மையத்திலேயே இந்த ஆலயம்
அமைந்துள்ளது.

திருவாமாத்தூர் மாரியம்மன்

அண்ணன் ஒருவன் தன் தம்பியை ஏமாற்றி பணத்தையெல்லாம் ஏமாற்றி மூங்கில் கைத் தடிக்குள் தங்கமாக்கி மறைத்து வைத்துக் கொண்டான். ஊர்மக்கள் அண்ணனை கோயிலில் வந்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். மாரியம்மனின் முன்பு நான் ஏமாற்றவில்லை என்று சத்தியம் செய்தான். கோயிலை விட்டு வெளியே ஊர் எல்லையில் நடந்துகொண்டிருந்தபோது, ‘‘நான் பொய் சொல்லியும் உங்க மாரியாத்தா என்னை ஒன்னும் செய்யலையே. இதுதானா உங்க ஆத்தா சக்தி’’ என்று அருகே இருப்பவரிடம் சொல்லி முடிக்கும் முன்பே காலை பெரிய நாகமொன்று தீண்டியது. சடேரென்று விழுந்தவன் கையிலிருந்த மூங்கில் குழல் பாறை மீது பட்டு தெறித்து தங்கக் கம்பிகள் சிதறின.

ஊர் பெரியவர்கள் அதிர்ந்தார்கள். அந்த திருவாமாத்தூர் மாரியம்மனே பாம்புருவில் வந்திருக்கிறாள் என்று ஆச்சரியமானார்கள். அதற்கு சாட்சியாக இன்றும் அம்மன் கோயிலில் பாம்பின் வால் பகுதியும், மூன்றாவது மைலில் தலையும் கல்லிலேயே தெரிகிறது. நியாயமான தீர்ப்புகளை இவள் வழங்குவதால் எப்போதும் மக்கள் தங்கள் குறைகளைக் கூறிய வண்ணம் உள்ளனர். விழுப்புரத்திலிருந்து 15 வது கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

கருவாழைக்கரை காமாட்சி

காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகா பெரியவர் இத்தலத்திற்கு வந்தபோது இந்த மாரியம்மனே காமாட்சியாகக் காட்சி கொடுத்தாளாம். அது முதல் இவளை காமாட்சி என்றே அழைக்கிறார்கள். பேரெழிலும் பொங்கும் அருளும் நிறைந்தவள். பல வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இவளே குலதெய்வமாக விளங்குகிறாள்.

பிரதி தினம் மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்துகின்றனர். சற்றே தொலைவில் காவிரி சிலுசிலுவென ஓடிக்கொண்டிருக்கிறாள். காவிரி தீர்த்தத்தாலேயே அபிஷேகம் செய்விக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு நிறைவேற்றுகிறார்கள். மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

பருத்தியூர் சந்தன மாரியம்மன்

பச்சை வயல்களின் நடுவே அருள் பூக்கும் திருமுகத்தோடு சந்தன மாரியம்மன் வீற்றிருக்கிறாள். காவல் தெய்வமான இவள் நிகழ்த்தும் லீலைகள் அனேகம். பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான். கடனை மீண்டும் செலுத்தியும் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், செல்வந்தர். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. பாவாடையோ ‘‘ஐயா… எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி’’ என்றான். அன்றிரவே ஆச்சரியமாக நீதிபதியின் கனவில் மாரியம்மன் சிறுமியின் வடிவில் தோன்றினாள். சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களை அழைத்து விசாரித்து நீதி வழங்கு என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்தது. காலையில் அவள் சொன்ன பெயர்களை வைத்து விசாரிக்க உண்மை வெளிப்பட்டது.

பாவாடை நிரபராதி என்று தீர்ப்பு சொன்னார். செல்வந்தருக்கு சம்மன் அனுப்பினார். இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு: கண்ணன்

The post ஆடி அம்மனின் பரவச தரிசனம்! appeared first on Dinakaran.

Tags : Adi Amman ,Kunkumum Anmikam Ammankudi ,Durgai Durgai Mahishana ,Durga Devi Nanilaum ,Chola ,
× RELATED ஆடி அம்மனின் பரவச தரிசனம்!