×

கிச்சன் டிப்ஸ்

* பனீரை வெட்டும் முன்பு கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல், உதிராமல் துண்டுகளாக வரும்.
* கடலைமாவு, அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சமையல் சோடா போடாமலே பஜ்ஜி நன்றாக உப்பி வரும்.
* பாயசமோ, பாதாம் கீர், கேரட் கீரோ நீர்த்துவிட்டால் சிறிது கசகசாவை ஊற வைத்து, மை போல அரைத்துச் சேர்த்து கொதிக்க விட்டால் போதும். கெட்டியாகும்.
* இட்லி மாவு சரியாக புளிக்கவில்லையென்றால் ஹாட் பேக்கில் கொட்டி சில மணி நேரம் மூடி வைத்தால் சீக்கிரம் புளித்துவிடும்.
* தேங்காய்ப்பூ, பச்சைமிளகாய், உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்தால் சட்னி வெள்ளைவெளேரென்று இருக்கும். கடுகு தாளிக்கக் கூடாது.
* கொத்துமல்லித் தழையை வாழை இலையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமலிருக்கும்.
* கத்தியின் முனையை உப்பில் அழுத்தி எடுத்து உபயோகித்தால் மீன், இறைச்சியை சுலபமாக நறுக்கலாம்.
* பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால் சீக்கிரம் பழுக்காமல் பச்சையாகவே இருக்கும்.
* வத்தக்குழம்பு, காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிதுதக்காளியை மிக்ஸியில் அரைத்து கலந்தால் போதும். காரம் குறைந்து தக்காளி வாசனையுடன் கலரும் கூடுதலாகும்.
* கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க, கூடவே ஒரு ஆப்பிள் பழத்தை போட்டு வைத்தால் போதும்.
* பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது எலுமிச்சை அல்லது தக்காளி ஜூஸ் சிறிது கலந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் உள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய்விடும்.- மல்லிகா அன்பழகன்.
* நூடுல்ஸ் தயாரிக்கும்போது கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போடுவதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றினால் நூடுல்ஸ் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.
* கட்லெட் செய்வதற்கு பிரெட் க்ரம்ப்ஸ் (ரொட்டித்தூள்) இல்லாத சமயத்தில் ரவையை சிவக்க வறுத்து அதில் புரட்டிச் செய்யலாம்.
* பருப்புகளை வேக வைக்கும்போது தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
* தட்டை செய்யும்போது உளுந்தம்பருப்பை வறுத்துப் பொடி செய்து போடுகிறோம். பொட்டுக்கடலை பொடியும் சேர்த்துப் போட்டால் தட்டை கரகரப்பாக இருக்கும். அதிகம் வெண்ணெய் போட வேண்டியதில்லை
* சமைத்து வைத்த கீரை மிச்சமாகிவிட்டால் உளுந்தமாவு அரைத்துக் கீரை வடை செய்து பயன்படுத்தலாம்.
* பூரி, சப்பாத்தி செய்யும்போது மாவு தேவையான அளவு இல்லை என்றால், உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி மசித்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி சப்பாத்தி செய்யலாம்.
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டியோ, அரைத்தோ சமையலுக்கு சேர்க்கும்போது அவற்றின் தோலை அகற்றிவிடக்கூடாது. தோலுடன் சேர்த்து தட்டி அல்லது அரைத்துப் போட வேண்டும். அப்போதுதான் அவற்றின் முழுமையான மணத்தையும், ருசியையும் பெற முடியும்.
* ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்துப் பாலைக் காய்ச்சி வைத்தால் நீண்ட நேரம் பால் கெடாமல் இருக்கும்.
* பாயசம், குருமா இவற்றிற்கு தேங்காய்ப்பால் எடுக்கும்போது தேங்காய்த் துருவலுடன் ஒரு தேக்கரண்டி பச்சரிசியை பத்து நிமிடம் ஊறவைத்த பின்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கெட்டியான தேங்காய்ப்பால் கிடைக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும்போது தேங்காய்த் துருவலை பொன் வறுவலாக வறுத்துப் போட்டதும் இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து கையால் நொறுக்கி சாதத்துடன் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
– எல். மோகனசுந்தரி

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?