×

மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 6 பேர் அதிரடி கைது

நெல்லை: களக்காட்டில் மண்ணுளி பாம்பை பதுக்கி விற்பனை செய்ய முயற்சி செய்த 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இரட்டை தலை பாம்பு என்றழைக்கப்படும் மண்ணுளி பாம்பில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக கூறி அதனை சிலர் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கும்பல் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மண்ணுளி பாம்பு கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருப்பதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் நின்ற ஒரு காரில் அருகில் இருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் குமரியை சேர்ந்த தனீஸ் (27), முத்துசாமி (43), கேரளாவை சேர்ந்த சன்னி (59), அர்சத் (55), தென்காசியை சேர்ந்த முருகேசன் (45), ஹரி (எ) ஐயப்பன் (41) என தெரியவந்தது. தனீஸ் என்பவர் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, அர்சத் உள்ளிட்டோரை களக்காட்டிற்கு வரவழைத்ததும், மண்ணுளி பாம்பிற்கு ரூ 10 லட்சம் வரை பேரம் பேசியதும் அம்பலமானது. இதையடுத்து கீழக்கருவேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன் ஹரி (எ) ஐயப்பன், அர்சத் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், செல்போன், லேப்டாப் ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக புதுத்தெருவை சேர்ந்த அந்தோணி முத்து (41) உள்பட சிலரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

The post மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Galakkad ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...