×

புத்தன் அணை தண்ணீர் வந்து சேரும் சுத்திகரிப்பானில் டியூப் ஷெல்டர் அமைக்கும் பணி தொடக்கம்: கழிவுகளை தனியாக பிரிக்க ஏற்பாடு

நாகர்கோவில்: புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பானில் கழிவுகளை தனியாக பிரித்து அகற்றும் வகையில் டியூப் ஷெல்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் ₹250 கோடியில், புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டப்படி புத்தன் அணையில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய் மூலம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்கான மொத்த தூரம் சுமார் 32 கி.மீ. ஆகும். இதற்காக பாலமோர் ரோட்டில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இது தவிர நாகர்கோவில் மாநகரில் 2 லட்சம் லிட்டர் முதல் சுமார் 9 லட்சம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 11 நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இந்த திட்டத்துக்காக கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், புதிதாக குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டடுள்ளது. தற்போது இதன் கட்டுமான பணிகள் முடிந்து, டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இது தவிர கிருஷ்ணன்கோவில் பில்டர் ஹவுசில் ஏர் ரேட்டர் (காற்று சுத்திகரிப்பு) அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீர், இந்த ஏர் ரேட்டரை அடையும். இதில் நீரில் உள்ள இரும்பு சத்து பிரிக்கப்பட்டு படிமமாக கீழ் பகுதியில் சேரிக்கப்படும். பின்னர் தண்ணீர், நீர் தேக்கி (ஸ்டீலிங் சேம்பர்) மூலம் தொட்டிகளுக்கு சப்ளை ஆகும்.

நீரின் அளவீடு கால்வாய் (மெமரி சானல்) அமைக்கப்பட்டு பிரத்யேக கருவிகள் பொருத்தும் பணிகளும் நடக்க உள்ளன. இதில் வினாடிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு நீர் வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு நீர், ஒரு நாளைக்கு எவ்வளவு நீர், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கு எவ்வளவு நீர் என்பதை கணக்கீடு செய்ய முடியும்.

முதற்கட்டமாக 2 ஏர் ரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சோதனை அடிப்படையில் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. ஏர்ரேட்டர், புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 35 சதவீத பணிகள் செய்யப்பட வேண்டி உள்ளது. இது தவிர சுமார் 85 ஆயிரம் வீடுகளுக்கு தண்ணீர் அளவை கணக்கீடு செய்யும் மீட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன

இந்த நிலையில் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ஏர் ரேட்டரில், கழிவுகளை தனியாக பிரித்து சேமிக்கும் வகையில் டியூப் ஷெல்டர் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஏர் ரேட்டரிலும் தனித்தனியாக குறிப்பிட்ட இடைவெளிகளில் டியூப் ஷெல்டர் அமைக்கப்படுகிறது. புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீரில் இருந்து கழிவுகளை பிரத்யேகமாக ஏர் ரேட்டர் பிரித்து எடுக்கும். இவ்வாறு பிரித்து எடுக்கும் கழிவுகள் சிறிய பந்து அளவுக்கு உருளை போல் மாறி, இந்த டியூப் ஷெல்டரில் சேமிக்கப்படும்.

பின்னர் இந்த கழிவுகளை வெளியேற்ற தனியாக டேங்க் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த டியூப் ஷெல்டர் அமைக்கும் பணிக்காக நேற்றும், புத்தன் அணை தண்ணீர் சோதனை முறையில் திறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

The post புத்தன் அணை தண்ணீர் வந்து சேரும் சுத்திகரிப்பானில் டியூப் ஷெல்டர் அமைக்கும் பணி தொடக்கம்: கழிவுகளை தனியாக பிரிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Puthan dam ,Nagercoil ,Budhan Dam ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது