×

பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லாமல் தப்ப முடியாது: கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சியைப் பொறுத்தவரை அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது பொருளாதார வளம்மிக்க நாடாக இந்தியா உயரும் என்று நேற்று பேசியிருக்கிறார். கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பேன் என்று கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற உத்தரவாதத்தை பறிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்து தலைநகர் தில்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். அவர்களை சந்தித்து பேசுவதற்கு மோடி தயாராக இல்லை. கடந்த 80 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் அப்பாவி இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதுவரை சுதந்திர இந்தியா காணாத பாலியல் கூட்டு பலாத்காரம் மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது. இதை சமூக ஊடகங்களில் பார்க்கிற நாட்டு மக்கள் எதிர்கொள்கிற மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் அளவே இருக்க முடியாது. மணிப்பூர் சகோதரிகளுக்காக நாடே இன்றைக்கு கண்ணீர் வடிக்கிறது. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்காத பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக பிரதமர் மோடி வாய்மூடி மௌனியாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் சொல்ல தயாராக இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுக்க தவறிய மோடியும், அமித்ஷாவும் இன்றைக்கு பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள். ஆனால், மணிப்பூர் கலவரத்தின் போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினையை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார்.

The post பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லாமல் தப்ப முடியாது: கே.எஸ்.அழகிரி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Parliament ,Forum ,K.K. S.S. anakiri ,Chennai ,Tamil Nadu ,Congress ,K.K. S.S. ,Analakiri ,PM ,Anakiri Gatam ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...