×

குடியாத்தம்- ஒடுகத்தூர் வழித்தடத்தில் மீண்டும் அடாவடி படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட டிரைவர், நடத்துனரை தாக்க முயன்ற ‘புள்ளீங்கோ’: நடுரோட்டில் பஸ் நிறுத்தியதால் பரபரப்பு

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த டிரைவர், நடத்துனரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம்- ஒடுக்கத்தூர் வழித்தடத்தில் தடம் எண் 10 மற்றும் 17 ஆகிய பஸ்கள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 10ம் நம்பர் பஸ் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிகொண்டு குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா திப்பசமுத்திரம், கருங்காலி வழியாக ஒடுகத்தூர் சென்று கொண்டிருந்தது.

அப்போது திப்பசமுத்திரம் பகுதியை கடந்து சென்றபோது பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்களில் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும், கால்களை சாலையில் தேய்த்துக் கொண்டும் விசில் அடித்து அடாவடித்தனம் செய்து கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனை பாரத்து அதிரச்சியடைந்த பஸ் டிரைவர் உடனடியாக நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி கீழே இறங்கி வந்து அடாவடி செய்த புள்ளீங்கோவை கண்டித்துள்ளார். அப்போது, புள்ளீங்கோ டிரைவர், நடத்துனரை பார்த்து நீங்கள் எங்களை கேள்வி கேட்காதீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசி தாக்க முயன்றதாக தெரிகின்றது.

இதனையடுத்து டிரைவர், போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் வரை பஸ்சை எடுக்கமாட்டேன் என கூறியதையடுத்து சக பயணிகள் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், டிரைவரை பேருந்து இயக்குமாறு கூறியதையடுத்து அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரிசெய்தனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஒடுகத்தூர் சென்ற 17ம் நம்பர் பஸ்சில் மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்டது.

தொடர் கதையாகி வரும் ‘புள்ளீங்கோ’ அட்டகாசத்தால் நடத்துனர், டிரைவர் மட்டுமின்றி பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகள், பயணிகளையும் இந்த சம்பவங்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. எனவே, சம்மந்தப்பட்ட புள்ளீங்கோ ஸ்டைலில் திரியும் மாணவர்களை அவர்களது பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் கண்டிக்க வேண்டும் என கல்வி நெறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தானியங்கி கதவுகள் வேண்டும்
கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலும் விவசாயிகள், மாணவர்கள் தான் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இதில், மாணவர்கள் படியில் தொங்கிகொண்டு அட்டகாசம் செய்வதை தவிர்க்க கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசு பஸ்சில், மாநகர பஸ்சில் உள்ளதை போன்று இருபக்கங்களிலும் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாரபட்சமின்றி பள்ளி நிர்வாகம் டி.சி வழங்க வேண்டும், போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

The post குடியாத்தம்- ஒடுகத்தூர் வழித்தடத்தில் மீண்டும் அடாவடி படிக்கட்டில் பயணம் செய்ததை தட்டிக்கேட்ட டிரைவர், நடத்துனரை தாக்க முயன்ற ‘புள்ளீங்கோ’: நடுரோட்டில் பஸ் நிறுத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adavadi staircase ,Odugattur ,Nadurot ,PALLICONDA ,Palligonda ,Adavadi ,Dinakaran ,
× RELATED ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க...