ஊட்டி: காட்டேரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால், அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி மற்றும் மாயார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.கடந்த இரு மாதங்களாக மழை பெய்யாத நிலையில், இந்த நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேத்தி பாலாடா, காட்டேரி டேம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது கன மழையும் பெய்கிறது.
இதனால், காட்டேரி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பார்க்கும்போது வெள்ளி இழைபோல் காட்சியளிக்கிறது. இதனை ஊட்டியில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி டேம் வழியாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
இன்னும் ஒரு சில தினங்கள் மழை பெய்தால், அருவில் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
The post அணையில் உபரிநீர் திறப்பால் காட்டேரி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.