×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கலாஷேத்ரா அறக்கட்டளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது. குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், “எங்கள் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும். எங்கள் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளோம். கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறிவிட்டது. பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்கத் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது.பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்தும் கலாஷேத்ரா தவறிவிட்டது.

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்டவிரோதமானது. மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது. புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும். பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழையவும், மாணவிகளிடம் கலந்துரையாடவும் தடை விதிக்கவேண்டும்.

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த கொள்கையை வகுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, “வெறும் கண்துடைப்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மாற்றியமைக்கப்படவில்லை” எனவும் குற்றம்சாட்டினார். அப்போது கலாஷேத்ரா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது” என உத்தரவாதம் அளித்தார்.

சென்னை சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரில் கடந்த ஏப்ரல் 3ல் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை அளிக்கபப்டுவதாக 162 மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.

மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. பாலியல் புகார் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர். பாலியல் புகார் தொடர்பாக ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் காவல் நிலையத்தி வழக்கு பதியப்பட்டது. 60 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6ல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Chennai ,Kalashetra College ,
× RELATED சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள்...