×

தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் உபரிநீருக்கு புதிய வழித்தடம்: விரைவில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து உபரிநீருக்கு புதிய வழித்தடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம் வராகநதி ஆறு, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.

இந்த வராகநதி ஆற்றில் வடுகபட்டியில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு வாய்க்கால் பாசனமும், நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், குள்ளப்புரம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு ராஜவாய்க்கால் வழித்தடத்தில் வரும் தண்ணீர் செல்கிறது. இது தவிர தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஓடைகள் ஆங்காங்கே கண்மாய்களில் சென்று, அங்கிருந்து உபரி நீராக வராகநதி ஆற்றில் கலக்கிறது. வராகநதி ஆற்றுப்பாசனம், வைகைஅணை துணைவாய்க்கால் பாசனம் என ஏராளமான பாசன வசதிகள் இருந்தும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் 5 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களாக உள்ளது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் வெறும் மானாவாரி பயிர்களை மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சிமலைகளில் அதிகளவு மழை பெய்து, வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான கன அடி நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டிக்கு அடுத்து அ.வாடிப்பட்டி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து வடக்கு பக்கம் பெரும்பாலான இடங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளது. அ.வாடிப்பட்டி, வேலாயுதபுரம், அ.புதூர், ஐந்து ஏக்கர் காலனி, ஆகிய இடங்கள் உள்ளன. இந்த பகுதியில் பருவமழையை நம்பி ஆங்காங்கே சிறு சிறு குளங்கள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரினால் இந்த குளங்கள் தடுப்பணைகள் நிரம்புகின்றன. அவற்றை வைத்து ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களாகவே உள்ளது.

இந்த பகுதியை செழுமையாக்க வேண்டும் என்றால், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து வடக்கு பக்கம் வண்ணான் கரட்டை ஒட்டியே புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால் அ.வாடிப்பட்டி வரை கொண்டு செல்ல வேண்டும்.இந்த வாய்க்காலில் இருந்து ஆங்காங்கே துணை வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். சிறு,சிறு குளங்களுக்கு நீர்வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த பகுதி விவசாயிகள் பல முறை ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனால் அரசு எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. போதுமான தண்ணீர் வசதி இருந்தும், புதிய வழித்தடம் அமைக்காமல் பல ஆயிரம் கன அடி நீர் வீணாக செல்கிறது.

விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்
விவசாயி முருகன் கூறுகையில், ‘‘ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் பல ஆயிரம் கன அடி நீர் நம் கண் முன்னே வீணாக செல்கிறது. பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் தரிசு நிலங்கள் இருப்பது இயற்கை ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் செழுமையான இடங்களில் இப்படி ஒரு வறட்சி பகுதி என்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் மட்டும் வீணாக செல்லும் உபரி நீரை மட்டும் இந்த வழித்தடத்தில் திருப்பினால் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். இந்த உபரிநீரால் பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் உயரும். தற்போது இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்து பெரும்பாலும் நிறைவேற்றி வருகிறது. ஆனால், இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட்டு வாழ்க்கை தரம் உயரும். ஆகையால் அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அ.வாடிப்பட்டி பகுதிக்கு புதிய நீர் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் உபரிநீருக்கு புதிய வழித்தடம்: விரைவில் அமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jayamangalam Vedtuvankulam ,Devadanapatti ,Jayamangalam Vedtuvankulam Kanmai ,Theni ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை