×

ஆற்காட்டில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி பயணிக்கும் இளைஞர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டு, ஜன்னல் மற்றும் ஏணியில் தொங்கியபடி இளைஞர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதனை வலியுறுத்தி போக்குவரத்து துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை நடத்தி அபராதம் விதித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆற்காடு பகுதியில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் இந்த உத்தரவு காற்றில் பறந்த நிலையில் உள்ளது. அரசின் உத்தரவை மீறி பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதில் பெரும்பாலான இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று வாலாஜாவில் இருந்து வேலூர் நோக்கி ஆற்காடு வழியாக தனியார் பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் அதிக அளவு பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். மேலும், பஸ்ஸின் 2 படிக்கட்டுகளிலும் அதிகளவு தொங்கியபடி சென்றனர். மேலும், பஸ்ஸின் பின்புறம் உள்ள ஏணியிலும் இளைஞர்கள் தொங்கியபடி சென்றனர். அதில், ஒருவர் ஏணியில் தொங்கி கொண்டு செல்பி எடுத்தபடி சென்றது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தையும் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் செக்கிங் கண்டு கொள்ளாமல் உள்ளது வேதனையாக உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுத்து, விபத்து ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஆற்காட்டில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி பயணிக்கும் இளைஞர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aradad ,Arkadam ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...