×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலிருந்து முகமது சிராஜ்-க்கு ஒய்வு

பிரிட்ஜ்டவுன்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இந்த தொடரை இந்தியா மிகுந்த முனைப்புடன் அணுகுகிறது.

அதே சமயம் உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை துடைத்தெறியும் வகையில், சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பணிச்சுமை காரணமாக இந்திய அணி, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு நாடு திரும்பிய ரவிச்சந்திரன் அஷ்வின், கேஎஸ் பாரத், நவ்தீப் சைனி, கேஎஸ் பாரத் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோருடன் சிராஜூம் நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனட்கட், உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஷர்துல் தாக்கூர் மட்டுமே 35 ஒருநாள் போட்டிகள் விளையாடிய அனுபவம் கொண்டவர் ஆவார். சிராஜுக்கு மாற்று வீரர் பெயர் குறிப்பிடப்படுமா இல்லையா என்பது குறித்தான தகவல் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 அணியிலும் சிராஜ் இடம் பெறவில்லை.

இந்தியா அணி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பையை விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபரில் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலிருந்து முகமது சிராஜ்-க்கு ஒய்வு appeared first on Dinakaran.

Tags : Mohammad Siraj ,T20 ,West Indies ,Bridgetown ,India ,Kensington Oval ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு