×

இந்திய ஒன்றிய அரசால் நகர்ப்புற ஏழைகளுக்காக நடத்தப்படும் திட்டங்கள் என்ன?.. நாடாளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் பதில்

டெல்லி: நகர்ப்புற ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்கள் என்ன? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்விக்கு, 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கௌஷல் கிஷோர் பதிலளித்தார்.

அதில், நகர்ப்புற வளர்ச்சி என்பது மாநிலம் சார்ந்த திட்டம் ஆகும். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நகர்ப்புறங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது. புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (AMRUT- 2.0), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன்- நகர்ப்புற 2.0 (SBM-U 2.0), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- நகர்ப்புற (PMAY-U), தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM), பிரதமரின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) மற்றும் நகர்ப்புற போக்குவரத்து திட்டங்கள்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை மற்றும் பாதிப்பை குறைக்க, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் “தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்” என்ற ஒன்றிய நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகிறது. திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளின் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கு சந்தை சார்ந்த சான்றிதழ் படிப்புகளை அளித்து, அவர்களுக்கு ஊதிய வேலை அல்லது சுய வேலை வாய்ப்புத் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 10,000/- சுழற்சி முறை நிதியாக வழங்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இணைப்புக் கடன்களுக்கு 7 விழுக்காடு வட்டி விகிதத்திற்கு மேல் வட்டி மானியத்தை சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குகிறது. கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பெண் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில், தனிநபர்கள்/நகர்ப்புற ஏழைகளின் குழுக்களுக்கு அவர்களின் திறன்கள், பயிற்சி மற்றும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப சுயதொழில் வியாபாரம் / சிறு, குறு நிறுவனங்களை அமைப்பதற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. தனிநபர் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் குழு நிறுவனங்களுக்கு, முறையே 2 லட்சம் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை குறுந்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. திறமையான சுயஉதவிக் குழுவினர்களில் சிலர் தங்கள் சேமிப்புத் தொகையினால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டை மதிப்பாய்வு செய்ய, தேசிய மற்றும் மாநில அளவில் ஆளும் குழு மற்றும் நிர்வாகக் குழு உள்ளது. நகர அளவில், நகராட்சி ஆணையர் தலைமையிலான நிர்வாகக் குழுவால் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நிர்வகிக்கப்படுகிறது.

திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாட்டைக் கண்காணித்து மறுஆய்வு செய்வது தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும், மேலதிகாரிகள் கள ஆய்வு மற்றும் கணொலி காட்சி மூலம் கண்காணிக்கிறார்கள். நிதிநிலை மற்றும் பயன்பாடு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் விரிவான வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-21 முதல் 2022-23 வரை) தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் படி தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை முறையே 23,748 மற்றும் 23,518 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதாவது 2018-19 முதல் 2022-23 வரை) தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.371.21 கோடி இந்திய ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post இந்திய ஒன்றிய அரசால் நகர்ப்புற ஏழைகளுக்காக நடத்தப்படும் திட்டங்கள் என்ன?.. நாடாளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Government of India ,Minister of Housing and ,Urban Affairs Department ,Delhi ,VICO ,Urban Poor ,Minister of Housing and Urban ,Affairs ,Parliament ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு...