×

நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் பிரகடனம்… மாளிகைக்குள் அதிபர் பாதுகாவலர்களால் சிறைபிடிப்பு!!

நைஜர் : மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் நாட்டின் அதிபர் மொகமெட் பாசோம் அவரது பாதுகாவலர்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நைஜரின் அதிபராக பதவியேற்றதில் இருந்தே அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார சுவால்களை எதிர்கொண்டு வந்தார். இந்த நிலையில், தலைநகர் Niamey-வில் உள்ள அதிபர் மாளிகைக்குள் பாசோமை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் சிறை வைத்துள்ளனர். அதிபரின் பாதுகாப்பு படையில் உள்ள அதிருப்தி ராணுவ வீரர்கள் அவரை தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் அதிருப்தி ராணுவ வீரர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து அதிபரை விடுவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில், பாஸூமை விடுவிக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் அரண்மனை முன்னாள் கூடி முழக்கங்களை எழுப்பினர்.ராணுவ வாகனங்கள் அரண்மனைக்குச் செல்வதை தடுத்து இருப்பதால் நிலைமை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிபரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதிபரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து பாசோம் நீக்கப்பட்டு இருப்பதாக அதிருப்தி ராணுவ குழு அறிவித்துள்ளது. மேலும் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு தேசிய அளவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நைஜர் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இந்த ராணுவ புரட்சிக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவம் பிரகடனம்… மாளிகைக்குள் அதிபர் பாதுகாவலர்களால் சிறைபிடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Niger ,Mokamet Bassom ,President ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!