×

இழப்பீடு வழங்காததால் காங்கயத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி: நடுவழியில் தவித்த பயணிகள்

 

காங்கயம், ஜூலை 27: காங்கேயத்தில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். காங்கயம் வக்கீல் வீதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). சாலை பணியாளர். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கயம் பஸ் நிலையத்தில் நடந்து சென்றவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். முறையான இழப்பீடு வழங்ககோரி கருப்பசாமியின் மனைவி மற்றும் வாரிசுகள் காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு பஸ் மோதி உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சத்து 85 ஆயிரத்தை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இழப்பீடு வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காங்கயம் பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

இதே போல் கடந்த 2012ம் ஆண்டு அரசு பஸ் மோதி உயிரிழந்த ருக்மணி (62) என்பவர் உயிரிழந்த வழக்கில் ரூ 7.40 லட்சம் இழப்பீடு வழங்காததால் காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்த மற்றொரு அரசு பேருந்தும் ஜப்தி செய்யப்பட்டது. இது குறித்த நோட்டீஸ் அறிவிப்பையும் பஸ்சின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினர். இதையடுத்து ஓட்டுநர், நடத்துநர் பேருந்தை விட்டு இறங்கினர். பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் பேருந்துகளை நிறுத்தி ஜப்தி செய்ததால் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக இருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களது பயணம் பாதிக்கப்பட்டது.

The post இழப்பீடு வழங்காததால் காங்கயத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி: நடுவழியில் தவித்த பயணிகள் appeared first on Dinakaran.

Tags : 2 Govt ,Gangaiah ,Kangayam ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் 126 வயது மூதாட்டி மரணம்