×

திருவேங்கடம் அருகே கேரள தக்காளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிப்பு அமமுக செயலாளர் உள்பட 4பேருக்கு வலை

திருவேங்கடம், ஜூலை 27: கடையம் அடுத்துள்ள மேலமாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் சுபு (26). இவர் திருவனந்தபுரம் அடுத்துள்ள நெடுமாங்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் அஜி(35), சிரிஜு(40 )ஆகியோர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் சுபுவிடம் உங்கள் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் தக்காளி வாங்கி தருமாறு கூறினர். இது பற்றி சுபு தனக்குத்தெரிந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் விவரம் கேட்டுள்ளார். அவர் தான் ஓசூர் பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு தக்காளி வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சுபு மற்றும் அஜி உட்பட 4 பேர் கேரளாவில் இருந்து கார் மூலம் சங்கரன்கோவில் வந்தனர்.

சங்கரன்கோவிலில் இருந்து அந்த நபரை செல்போனில் அழைத்தபோது அவர் திருவேங்கடம் பகுதிக்கு வர கூறியுள்ளார். திருவேங்கடம் வந்ததும் வெகு நேரம் காத்திருந்த சுபு உள்ளிட்டோரை திருவேங்கடம் ராஜபாளையம் சாலையில் உள்ள நிச்சேப நதி பாலம் அருகே வருமாறு அந்தநபர் கூறியுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த நபர் பணம் கொண்டு வந்து உள்ளீர்களா? என கேட்டுள்ளார். பின்னர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் கம்பால் மிரட்டி சுபு உள்ளிட்டோரிடம் இருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து சுபு உள்ளிட்ட 4 பேரும் திருவேங்கடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில் திருவேங்கடம் அருகே கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கணேசன் மகன் மணிகண்டன் (35) ராம்குமார், விஷ்ணு சங்கர் (32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருசாமி (55) ஆகிய 4 பேரும் இந்த பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து திருவேங்கடம் போலீசார், 4பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பணம் பறிப்பில் ஈடுபட்ட ராம்குமார் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருவேங்கடம் அருகே கேரள தக்காளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிப்பு அமமுக செயலாளர் உள்பட 4பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AAM ,Kerala ,Thiruvenkadam ,Thiruvenkatam ,Rama ,Subu ,Melamathapuram ,Katayam ,Thiruvananthapuram ,AAMUK ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...