×

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

ராதாபுரம், ஜூலை 27: தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138வது ஆண்டு பெருவிழா இன்று (27ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் சிறப்பு பெற்றது தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். இந்த ஆலயத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா வீற்றிருந்து அருளாசி வழங்கி வருகிறார். இந்த ஆலயத்திருவிழா இன்று (27ம் தேதி) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக அதிகாலை 5.15 மணிக்கு ஹெலன் ப்ளாரிட்டி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கள்ளிகுளத்தைச்சேர்ந்த குருவானவர்கள் அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ஜெபம் செய்து அர்ச்சிக்கிறார். அதனைத்தொடர்ந்து கோயில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார். தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திரியாத்திரை திருப்பலி நடைபெறுகிறது. ஆகஸ்டு 2ம் தேதி 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இரவு சென்னை களிகை சங்கத்தினர் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆகஸ்டு 3ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. இப்பவனியில் திரளானோர் பங்கேற்கின்றனர். ஆகஸ்டு 4ம் தேதி 9ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணி, 7.30மணி, 9.30மணி, 11.30 மணியில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அதிசய பனிமாதா எழுந்தருளிய பின்னர் பவனி நடைபெறுகிறது. ஆலயத்தைச்சுற்றியுள்ள ரதவீதிகளில் தேர் பவனி வந்து அதிகாலை 5 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.

ஆகஸ்டு 5ம் தேதி 10ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு பங்குதந்தை ஜெரால்டு எஸ்.ரவி தலைமையில் திருமுழுக்கு திருப்பலி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் காலை 11.30 மணிக்கு குணமளிக்கும் நற்கருணை வழிபாடும் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு முதல் சனி திருப்பலி நடைபெறுகிறது. ஆகஸ்டு 6ம் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும் காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்கு தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

The post தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Southern Likulam Miraculous Panimata Temple Festival ,Radhapuram ,Southern ,Likulam ,Holy Miraculous Panimata Temple ,Southern Likulam Miraculous Panimata Temple Jubilee ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மழையால் சேதமடைந்த...