×

மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய தந்தை, மகன் கைது

தர்மபுரி, ஜூலை 27: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம் மாரண்டஅள்ளி பிரிவு, திருமல்வாடி வனக்காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று வனக்காப்பாளர் பழனி, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கவுரன் (58), அவரது மகன் ராம்குமார்(32), ஆகியோர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நுழையும் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வயலை சுற்றி 100 மீட்டருக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தனர். அப்போது, மின்வேலியில் சிக்கி அவ்வழியாக வந்த காட்டுபன்றி உயிரிழந்தது. உயிரிழந்த காட்டுப்பன்றியை வீட்டிற்கு எடுத்து சென்று சுத்தம் செய்து கறியாக பாத்திரத்தில் வைத்திருந்தனர். இதையடுத்து ராம்குமார், கவுரவனை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர், இருவரையும் பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 9 நாட்கள் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் அப்பல்லநாயுடு கூறியதாவது: குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்வாரியத்துறை இணைந்து சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு, இதுபோன்று சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டது தெரிய வந்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிக்கப்படும் நிலையுள்ளது.

மேலும், வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனத்திற்கோ, வனவிலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் அறிந்தால், தர்மபுரி வனத்துறை இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மின்வேலி அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடிய தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District ,Palakodu Forestry Division ,Marandaalli Division ,Tirumalwadi Forest Guard ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை