×

தமிழக அரசு அறிவிப்பு நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் ‘நம்மாழ்வார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு திட்டங்களில் சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. 2023-24ம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ‘நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த விருது ரூ.5 லட்சம் பணப்பரிசு, பாராட்டு பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இதற்கான நிதியினை ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயி குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மை முறைகளை பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டு, முழு நேர அங்கக விவசாயியாக இருத்தல் அவசியமாகும். மேலும், அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பரிசாக, ரூ.2.50 லட்சத்துடன் ரூ.10,000 மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ.1.50 லட்சத்துடன் ரூ.7,000 மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ.1 லட்சத்துடன் ரூ.5,000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவோ அல்லது www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூலம் தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் அரசுக்கணக்கில் செலுத்தி, 30.11.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழக அரசு அறிவிப்பு நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்